ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்

ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்

7

மூகத்தில் பெண் என்பவள் தாய் அல்லது மனைவி என்கிற நிலையில்தான் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகிறாள். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பொருளாதார வாழ்வில் பெண்கள், ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம். மற்றது இந்தப் பொருளாதாரச் சார்பு நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுச்சூழல்.

வீட்டு வேலைக்குப் பெண் எனவும் அந்த வீட்டையும் சுற்றத்தையும் பராமரிக்கும் பொருள் தேடி வெளியில் அலைபவன் ஆண் எனவும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சார்புநிலை என்பதை அவளே அறிந்திருந்தாலும், அவள் அந்நிலையிலிருந்து மாற விரும்புவதில்லை. குழந்தை வளர்ப்பு, வீட்டைப் பராமரிப்பது, குடும்பத்தினருக்குத் தேவையான சமையல், அதற்கான எரிபொருள்கள் தேடுதல், தண்ணீர் தேடி சேகரித்தல்… இப்படியான  வீட்டு வேலைகளுக்குப் பொருளாதார மதிப்பீடு செய்து பார்த்தால் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் ஆண்களை விடவும் கூடுதலாகவே இருக்கும். இவை தவிர குறைவான ஊதியத்தில் அதிக வேலை, சேவை வேலைகள், சம்பளமில்லா வேலைகளைச் செய்வதெல்லாம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆண்-பெண் சமத்துவத்தை சட்டங்கள் வலியுறுத்தினாலும் மரபு வழியாக அமைந்த பண்பாட்டு மனம் என்பது ஆண்களிடமும்  பெண்களிடமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. குழந்தைப் பிறப்பு முதல் வளர்ப்பிலும் ஆண்-பெண் வேறுபாடுகளை இந்த சமூகம் பயிற்றுவித்திருப்பதால், அத்தனை எளிதில் மாறுவதற்கு இருவருமே தயாராக இல்லை என்பதே உண்மை.

இந்தப் பண்பாட்டு மனதின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் சங்க காலத்திலும் பொருள்வயின் பிரிவு என்பது ஆண்களுக்கானது.  ஒரு பெண்ணைத் தேர்வு செய்த பின்பு அந்த ஆண் அரிய வகை  பரிசப் பொருட்களைத் தந்து அவளைத்  திருமணம் செய்ததாக மரபு உள்ளது. அதற்காகவே தலைவன் திருமணத்துக்கு முன்பாக பொருள் தேடிச் செல்கிறான். இன்றும் கூட திருமணச் சடங்குகளில் மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் ‘வளைவிலை’ என்கிற பரிசப் பணமும் சீரும் இதற்குச் சாட்சி. திருமணத்துக்குப் பிறகு குடும்பம் நடத்தவும் தலைவிக்கு அணிகள் சேர்க்கவும் ஓர் ஆண் பொருள் தேடி செல்கிறான். மேலும் சமூகத்தில் மதிப்பு, மரியாதை என்கிற நிலையை அடைவதற்கும்  ஆண் என்பவன் பொருள் தேடிச் சேகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஓர் ஆண் தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமன்றி, சுற்றத்தினருக்கும் சேர்த்தே பொருள் தேடவேண்டியிருக்கிறது. இந்நிலை இன்றைய காலத்துக்கு மட்டுமானது அல்ல. சங்ககாலத் திலும் பொருள் தேடுதல் என்பது அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. அதுவே அறம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது . ஒருவர் அறநிலை நீங்காது இருக்க வேண்டுமெனில் பொருளில் வளமுடையவராக இருக்கவேண்டும். மேலும் உறவினர்களின் துன்பங்களைக் களைந்து அவர்களையும் காக்கவேண்டும் என்பது தலைவனின் கடமையாக  இருக்கிறது.

பொருள்தேடி பிரிந்து சென்ற தலைவனை நினைத்து மனம் வருந்தி நின்ற தலைவியிடம் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த  முள்ளியூர்ப் பூதியாரின் பாடல் இது…

‘அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்’ எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், ‘நறு நுதல்

மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில நாள் தாங்கல்வேண்டும்’ என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி,
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ

பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உறைஇக் கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்

கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே’

அற நெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை  நடத்தல் வேண்டும்… சிறந்தவர்களாகிய நம்முடைய சுற்றத்தாரது பலவகையான துன்பங்களை தாங்குதல் வேண்டும்… இவ்விரண்டை யும் செய்யாமல் வீட்டிலேயே சோம்பி இருப்பவருக்கு ஒருநாளும் இன்பம் இல்லை என்பதால் நம்முடைய தலைவர் பொருளீட்டும் முயற்சியை விரும்பி மேற்கொண்டுள்ளார். பல புரிகளால் முறுக்கப்பட்ட நீண்ட கயிற்றால்  கட்டப்பட்ட  வண்டியினை, எருதுகளின் வலிமையான  பிடரியில் பூட்டி, மேடான இடங்களில்  ஓட்டும்போது  உப்பு வாணிகர் அவற்றை அதட்டும் ஓசையைக் கேட்டு ஆண் மானும் பெண் மானும் பயந்து நிலைகெட்டு ஓடத்தொடங்கும்.

‘உமண்விளி’ என்பது உப்பு விற்கச் செல்லும் உமணர், உப்பு வண்டியை மேட்டு நிலத்துக்கு ஏற்றும்போது எருதுகளைப் பல நுகங்களில் கட்டி ஒன்றாகப் பிணைத்து இழுக்கச் செய்வர். அப்போது பல நுக எருதுகளை ஓட்டுவதற்குப் பலர் செய்யும் அதட்டல் ஒலிதான் உமண்விளி. இது சுற்றத்தாருக்காக தலைவனும் தலைவியும் பிரிந்து செல்லுதலை மறைபொருளாகக் குறிப்பிடுகிறது . அத்தகைய மேட்டுநிலமுடைய காடுகளின் அழகு கெடுமாறு கோடையானது பரவி,  நிலைபெற்று நிலத்தின் நீரினை உறிஞ்சும்.  அதனால் நீர் வற்றிய அழகிய பெரிய  நீண்ட மூங்கிலின் கணுக்கள் பிளந்து முத்துகள் தெறிக்கும். அவை கழங்குக்காயைப் போல தோற்றமுடையவை. முன்பு அவ்விடத்தில் கழங்கு ஆட்டம் விளையாடிய குழிகளிலே முத்துகள் தெறித்து விழும்.

கழங்கு என்பது கழற்சிக்காய். இதனை இக்காலத்தில் சூட்டுக்கொட்டை என வழங்குவர். இது வெண்மையானது. கழங்குகளைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் கழங்கு. நீளமான மூங்கிலில் முத்து விளையும். இது  மண்ணா முத்தம் எனப்படுகிறது . அவை மூங்கிலின் கணு உடைந்து தெறித்து மண்ணிலுள்ள பழங்குழிகளில் விழுவது கழங்கு விளையாட்டு போல இருக்குமாம். இக்காலத்தில் சிறுவர்கள் குண்டைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் அக்காலக் கழங்காட்டம் போன்றது.

இனிய களிப்பைத் தருகிற கள்ளினையும் அழகிய தேரினையுமுடைய அரசனாகிய நன்னனது வானளாவிய நீண்ட மூங்கிலையுடைய உயர்ந்த மலைச்சாரலையும் பொன் கிடைக்கும் பக்கமலையினையும் கடந்து சென்றார் நம் தலைவர்… ‘நறுமணமுடைய நெற்றியையும் கரிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளே! அரிய துன்பத்தால் வருந்துதலை சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய மாண்புற்ற ஒளி பொருந்திய கைவளையினைத் திருத்தி, தலை கோதி, தலைவன் சென்றிருப்பதால் விரைவில் வந்துவிடுவார்’ என்று தோழி, தலைவியை ஆற்றியிருக்க வலியுறுத்து கிறாள்.

சங்க காலத்தில் வினை என்னும் சொல் போரிடும் செயலைக் குறிக்கும். ‘வினை முற்றிய தலைவன்’ என்று சொல்லும்போது இச்சொல் போர் நிகழ்வில் பொருள்படுவதைக் காணலாம். இந்தப் பாடலில் ‘செய்வினை’ என்று வருகிறது. எனவே, இது பொருள் தேடும் வகையில் சொல்லப்படுகிறது. ‘அறம் தலைப்பிரியாது ஒழுகலும்’ என்கிற நன்னோக்குடன் பொருளீட்ட தலைவன் சென்றி ருக்கிறார். எனவே, அவர் பிரிவை சிலநாள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்பது பெண்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.

கோடை பரவி, நீர் வற்றிய பாலைநிலப் பாதையில் பொருள்தேடச் செல்லும் தலைவன் தன்னுடைய பாலுணர்வுகளை கட்டுப்படுத்தி மிக கடினமான நிலவழியில்
பயணம் மேற்கொள்கிறான். இந்நிலையில் தலைவியும் அவளுடைய  உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தலைவனுக்காக ஆற்றியிருக்கிறாள். தனித்திருக்கும் தலைவி தன் நிலையிலிருந்து சோர்ந்து தளர்வுராமல் காக்க, முன்பான கூடல் காலங்களில் தலைவனும் தலைவியும் இன்புற்றிருந்த நிலைகளை எடுத்துச் சொல்லி தோழியர் மூலமாக ஆற்றுவிக்கப்படுகிறாள் என்பது மரபாக இருக்கிறது.

சமூகத்தின் இயக்கத்துக்குத் தேவையான நீர்மை என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதால், பால் உணர்வுகளை தலைவன் வரும்வரையில் தலைவி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்க வலியுறுத்தப்படுகிறாள். இன்றைக்கும் கூட வெளிநாட்டு வேலைகளை விரும்பி ஏற்கிற ஆண்களும் வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளையை மணம் முடிக்க பெண்களும் விரும்புவதைக் காண்கிறோம். திருமணமான முதல் மாதத்திலோ, இரண்டாம் மாதத்திலோ, கணவன் – மனைவி பிரிந்து வாழ நேரிடும் என்பதை இருவருமே அறிந்திருக்கின்றனர்.

என்றாலும் சமூகம் மதிக்கும் பொருளாதார ரீதியான வாழ்வைக் கட்டமைக்க இவ்வகையான நிலையை இருவரும் விரும்பி ஏற்கின்றனர். தமிழகத்திலிருந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக இருக்கிறது . குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 20 சதவிகிதமும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 15 சதவிகிதமும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 10 சதவிகிதமும் தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளிலிருந்து 7 சதவிகிதமும் பொருளீட்ட குடும்பத்தைப் பிரிந்து செல்லும் ஆண்களை உடையதாக இருக்கிறது. தினந்தோறும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வருகிற ரயிலில் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்கிற ஆண்கள் பலரையும் அவர்களின் துயரம் தோய்ந்த முகங்களையும் காண முடியும்.

ஓர் ஆண் தனக்காகவும் தன்னுடைய சுற்றத்தினருக்காகவும், பிறந்த மண், வீடு, குடும்பம் சார்ந்த உணர்வுகளையும் பாலுணர்வுகளையும்  கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதாக ஒரு பெண் நம்புகிறாள். அதனாலேயே ஒரு பெண் தன்னுடைய உடலை ஆணுக்கானதாக ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள். ஒரு பெண் தன்னுடைய மனதை ஆணுக்கானதாக ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள். ஒரு பெண் தன்னுடைய மொழியை ஆணுக்கானதாக ஒப்புக் கொடுத்து ஆற்றியிருக்கிறாள். தமிழகத்திலிருந்து குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக இருக்கிறது.

முள்ளியூர்ப் பூதியார் சங்க காலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். பூதன் என்று முடிகிற ஆண்பால் பெயர்கள் இருப்பதால் பூதி என்பது பெண்பால் பெயர் எனக் குறிப்பில் உணர்த்தப்படுகிறது. முள்ளியூர் இவரது ஊராக இருக்கக்கூடும் இவர் நிறைய பாடல்களை எழுதியிருக்கக் கூடும். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நமக்குக் கிடைத்திருப்பது ஒன்று மட்டுமே – அகநானூறு 173.

(சங்கத் தமிழ் அறிவோம்!)

 

This entry was posted in அனைத்தும், கட்டுரை, குங்குமம் தோழி and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக