ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்

14ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்

பொதுவாக இந்தக் காலத்தில் காதல் என்பது எவ்விதம் தொடங்குகிறது? கண்டதும் காதல், காணாமல் காதல், தொலைபேசி காதல், அலைபேசி காதல், குறுஞ்செய்தி காதல், மின்னஞ்சல் காதல், முகநூல் காதல் எனத் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. காதல் என்கிற சொல் அடுத்த தலைமுறையினரிடம் மிக இயல்பாக பரிமாறப்பட்டிருக்கிறது. Love and Hugs என்று எவ்விதமான மனத்தடையுமின்றி பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். திருமணத்துக்கு முன்பாக உறவு வைத்துக் கொள்ளலாமா கூடாதா என விவாதங்கள் ஒருபக்கம் நடக்கின்றன. டேட்டிங் கலாசாரம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் முந்தைய காலத்தில் கடிதங்கள் பரிமாறப்பட்டு காதல் தொடங்கியது அல்லவா? இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது. மிகக்கடுமையான  சாதியக் கட்டமைப்பில் இருந்த கிராமப்புறங்களில் கூட, சாதிவிட்டு சாதி காதல் கடிதங்கள் பரிமாறப்பட்டன. சில காதல்கள் இணைந்தன, பல காதல்கள்  தொடங்கின இடத்திலேயே முன் நகராமல் முடங்கிப் போயின. இன்னும் சில ஊரையும் உறவினரையும் விட்டு ஓடிப்போயின. இன்னும் சில காதல்கள்  தற்கொலை செய்துகொண்டன. இன்னும் சில பெற்றோரால் கௌரவக் கொலை செய்யப்பட்டன. இன்னும் சில ஊரையே பற்றியெரிய வைத்தன. இவ்விதமாக  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் காதலைப் பற்றிய தொடக்கமும் முடிவுமாக பல கதைகளை நாம் அறிந்திருக்கிறோம்.

அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் மிக முக்கியமானவை. அனேகமாக இந்தக் காலகட்டத்து திரைக் கதாநாயகர்கள் தாம் காதலிக்க விரும்பும் பெண்ணை தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் பற்றிப் பேசப் போகிறோம். கடிதம் கொடுத்து, ரோஜாப்பூ கொடுத்து, பரிசுப்பொருட்கள் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் கொடுத்து, கதாநாயகியின் பார்வையில் படும்படி அந்தப் பெண்ணின் தெருவில் அல்லது கல்லூரி வாசலில் நடையாக நடந்து, டீக்
கடையில் நாள் முழுதும் காத்திருந்து, அப்பா பணத்தில் பைக் வாங்கி கூலிங்கிளாஸ் போட்டு சுற்றிவருவது… அவள் செல்கிற பேருந்தில் தொங்கிக்கொண்டே  பயணம் செய்து அவள் கவனம் ஈர்ப்பது… இப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடித்து, போதாததற்கு பைத்தியமாக நடித்து, குடித்து ஆடை விலகி தெருவில் கிடந்து,  யாரேனும் அடியாட்களிடம் அடிபட்டு… இப்படி ஒரு பெண்ணை அடைய ஆண் செய்யும் தந்திரங்களாக திரைப்படங்கள் காட்டுகின்ற
காட்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வகையான ஒரு திரைப்படம் ‘விதி’. படத்தின் கதாநாயகியை தன்வசப்படுத்த கதாநாயகன் செய்யும் உத்திகள் ஏராளம். அந்தப் பெண் காதலை சொல்லும்போதே ‘நீங்க ஜெயிச்சுட்டீங்க’ என்று தொடங்குகிறாள். அந்தப் பெண்ணை உடலாகவும் அந்த ஆண் அடைந்த பின்பு தன்னை முழு வெற்றியாளனாக உணர்கிறான். ஆண் 10 ஆண்டுகள் கடந்தாலும் ஆணாகவே இருக்கிறான், பெண்ணோ 10 மாதங்களில் தாயாக ஆகிவிடுகிறாள்.இது இயற்கையின் நியதி என்று சொல்லி கதாநாயகன் விலகிச் செல்வது போலவே, அவனைத் திருமணத்துக்கு வலியுறுத்துவது பெண்ணின் கட்டாயமாக ஆகிவிடுகிறது என்பதாகக் காட்சிகள் தொடரும்.

இந்த இருவருக்குமான நெருக்கமும் உறவும் அவர்கள் இருவரும் முடிவு செய்வது, இந்த உறவுகளுக்கு வேறு எதுவும் சாட்சியாக இருக்க முடியாது. ஒரு பெண்  தன்னை உடலாகவும் ஓர் ஆணிடம் கொடுத்த பின்பு மிகுந்த கலக்கமடைகிறாள். திருமணத்துக்கு முன்பாக உறவு கொண்டதால் தான் களங்கமானவள் என்று  நினைக்கிறாள். உடன் உறவு வைத்துக் கொண்டவன் ஆண் என்பதால், அவனைப் பற்றி இழிவாக நினைப்பதில்லை. அந்த ஆண் தன்னை ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று விரும்புகிறாள். அவன் மறுத்து விலகிச் செல்கிறான் எனில், அந்தப் பெண் தன்னிலையிலிருந்து இறங்கி ஆணிடம் கெஞ்சுகிறவளாகவும்  பதற்றமுறுகிறவளாகவும் மாறுகிறாள்.

இயற்கையின் புற அடையாளங்களை வைத்து தன்னைச் சிறுமைப்பட்டவளாக ஒரு பெண் உணர்வது ஒருபக்கமும் அப்படி பெண்ணை சிறுமைப்பட்டவளாக  சமூகம் கற்பிப்பது மறுபக்கமும் என இன்றைக்கும் தொடரும் ஒரு நிகழ்வுதான் இது.இந்தப் படத்தை என்னுடைய பதின்பருவத்தில் பார்த்தேன். அப்போது நாங்கள் காடம்பாறையில் இருந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வரிசை வீட்டில் குடியிருந்த சாந்தியக்கா என்பவர் எங்களோடுதான் படத்துக்கு வந்திருந்தார். எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பவர் அவர். ஆட்கள் இல்லையென்றால் பூக்களோடும் செடிகளோடும் கூட பேசிக்கொண்டிருப்பார். அல்லது பாட்டுப்பாடிக் கொண்டிருப்பார். படம் முடிந்து திரும்பி வரும்போது சாந்தியக்கா மிக அமைதியாக வந்தார்.
மதியம் பார்த்த ‘விதி’ படத்தின் காட்சிகள் பற்றி எல்லோரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சாந்தியக்கா வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்துச் செத்துப் போனார். வீட்டுக்குள்ளிருந்து புகை வருவது பார்த்து எல்லோரும் உள்ளே போக, அப்போதே முக்கால்வாசி எரிந்து போயிருந்தார். காப்பாற்ற  முடியாமலும், ‘அவர் ஏன் அவ்விதம் செய்தார்’ என யாருக்கும் தெரியாமலும் செத்துப் போனார். திருமணம் ஆகாத ஒரு பெண் ‘விதி’ படம் பார்த்துவிட்டு  வந்தவுடன் செத்துப்போகிறார் என்றால் என்னவாக இருக்கும் என எனக்கு அப்போது புரியாத புதிராக இருந்தது.

பெண்களுக்கு தந்தையாக, சகோதரனாகத்தான் ஆண் என்பவன் அறிமுகம் ஆகிறான். அவள் பார்த்த அந்த ஆண்களின் அன்பைப் போலவே காதலனிடம்  எதிர்பார்க்கிறாள். அப்படியான காதலனையே கணவனாகவும் அடைய விரும்புவது பெண் மனமாக இருக்கிறது. பொதுவாக நீண்டகால பாதுகாப்பையும்  அன்பையும் ஓர் ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்க்கிறவளாக இருக்கிறாள்.

பெண் என்பவள் அடைவதற்கு அரியவளாக ஆண் முதலில் கருதுவதும், பின்பு அவளின் மனது அவன் வசப்பட்டவுடன் உடலுக்கு ஏங்குவதும், உடலும் வசப்பட்டவுடன் அந்தப் பெண்ணை அவன் மிக எளிதாகக் கடந்து செல்வதும் இயல்பாக நடந்துவிடுகிறது. இது திரைப்படங்கள் போலவே நிஜவாழ்விலும் நடந்துவிடுகிறது.இப்படியாக காதலில் தோய்ந்து தவித்திருக்கும் ஒரு பெண்ணின் நிலை பற்றிய வருமுலையாரித்தியின் பாடல்…

‘ஒரு நாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து, பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலுழும்என் நெஞ்சே’

ஒருநாள் வந்தவனல்ல… இரு நாள் வந்தவனல்ல… பல நாட்கள் வந்தவன். பலமுறை வந்து பணிவுடன் பேசி, என்னுடைய நல்ல நெஞ்சத்தை நெகிழ வைத்தவன்.  பின்னர், மலையில் முதிர்ந்து எவருக்கும் பயனளிக்காததும், வீழ்ந்தழிவதுமாகிய தேனடையைப் போல போனவன் ஆயினன். உற்ற துணையாகிய எந்தை போன்ற  அந்த தலைவன் இப்போது எங்கே இருக்கின்றானோ? வேறு புலன்களையுடைய நல்ல நாட்டிலே பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கிய ஆறாக  நம்மிடம் வருவது போல, என் மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகிறது என்பது பாடலின் பொருளாக இருக்கிறது.

ஆண் என்பவன் பெண்ணுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறான் என்பதாக பெண்நம்புகிறாள். ‘எந்தை’ என்று இங்கே சொல்வது கூட என் தலைவன் தந்தையைப் போன்றவன் என்கிற தந்தைமைச் சமூகத்துக்கான கருத்தாக்கத்தின் முன்னெடுப்பாகக் கொள்ளலாம்.வேறு ஊரில் பெய்த மழை ஆறாக பெருகி நெடுந்தொலைவு பயணம் செய்து பிறிதொரு ஊருக்குள் நுழையும் போது கலங்கி இருக்கும். அதுபோல தலைவன் தன்னை விட்டு வேறு எங்கேனும் சென்று இன்புற்று இருக்கக்கூடுமோ எனவும் தலைவி கலங்கியிருக்கலாம் என குறிப்பால் உணர்த்தப்படுகிறது.மலையின் உச்சியில் தேனீக்களால் முயன்று கட்டப்பட்ட முதிர்ந்த தேனடை என்பது அத்தனை எளிதில் வளைத்துவிட இயலாத தலைவியின் மனதைச் சொல்கிறது. அதனாலேயே தலைவன் ஒருமுறை அல்ல… இருமுறை அல்ல… பலமுறை வந்து பணிந்துப் பேசி அந்தப் பெண்ணை தன்னுடைய விருப்பத்துக்கு வணக்குகிறான்.

ஆண் இன்பம் நுகர்கிறவனாக இருக்கிறான் என்பதைக் குறிப்பிடவே தேன் என்றும் தேனடை என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. திருமணத்துக்கு முன்பாக  களவு காலத்தில் ஆண், பெண்ணுடன் உறவு கொள்கிறான். பின்பு பிரிந்து செல்கிறான். தலைவி காத்திருக்கிறாள். இம்மாதிரியான களவு காலத்தில் ஆணிடம்  தன்னை ஒப்புக்கொடுக்கும் பெண்கள்தான் பெரும்பாலும் ஆண்களை திருமணத்துக்கு வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் ஆண்  என்பவன் பெண்ணை திருமணத்துக்கு வலியுறுத்துவதாக அமைந்திருக்கும் காட்சிகள் இன்றைக்கும் கூட இல்லை என்றே சொல்லலாம்.

ஆண், பெண்  இருவரிடையே ஏற்படுகிற உடல் சார்ந்த உறவுக்குப் பின், ஆண் எப்போதும் தன்னை வெற்றியாளனாக பெருமிதம் கொள்கிறான். ஒரு பெண்ணைக்  கைக்கொண்டு விட்டதாகவும், இனி அவள் தன்னுடைய உரிமைக்கும் விருப்பத்துக்கும் உட்பட்ட பொருள் எனவும் நினைத்துக் கொள்கிறான். இந்தக்  காலகட்டத்துக்குப் பிறகு பெண்ணின் மனதில் ஏற்படுகிற உளவியல் சிக்கல்கள் அவளைத் தொந்தரவு செய்கின்றன. தன்னுடைய பாதுகாப்புக்காகவும் நீண்ட கால  உறவுக்காகவும் ஒரு பிணைப்பை அந்த ஆணுடன் ஏற்படுத்திக்கொள்ளவே ஒரு பெண் விழைகிறாள். உடல்சார் உறவுக்குப் பிறகு ஆணினுடைய சிறிய  அளவிலான விலகலையும் பெண் மனம் விரும்புவதில்லை.

இந்தச் சூழலில் இருக்கும் ஒரு பெண்ணின் நிலை என்பது தவிப்புடன் இருக்கிறது. அவள் முழுமையாக நம்புகிறவனே ஆனாலும், தன்னை அந்த ஆணிடம் ஒப்புக்
கொடுத்த பின்பு, எப்போதும் அந்தப் பெண் பதற்றத்தில் இருக்கிறாள். நீண்டகாலஉறவுக்கான சாத்தியப்பாடுகளை எண்ணி இயலாமையில் துன்புறுகிறாள். தன் நிலை எண்ணி கலங்கி நிற்கிறாள்.

“நல்ல நாட்டிலே பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கிய ஆறாக நம்மிடம் வருவது போல, என் மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகிறது…’’

வருமுலையாரித்திஇத்தி என்பது இவரது இயற்பெயராகவும் பெருமுளை என்கிற ஊரைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். பெருமுளை என்பது நாளடைவில் மருவி வருமுலை ஆகியிருக்கக்கூடும்.‘இத்தி’ என்பது விழுதுவிட்டு வளரும் ‘இற்றி’ மரத்தின் நாட்டுவழக்கு. பூ, செடி, கொடி, மரம் போன்ற பெயர்களை மனிதர்களுக்கு இட்டு அழைக்கும் வழக்கம் தமிழில் இருப்பதால் ‘பெருமுளை இற்றி’ என்கிற பெயர் வருமுலையாரித்தி என மருவியது எனலாம்.
இவரது பெயரை வருமுலை ஆரித்தி என்று பிரித்துப் பார்த்தால் பருத்த முலையை உடையவர் எனப் பொருள் வரும் எனவும், ‘முலை’ என்ற உறுப்பினால்  குறிக்கப்படுகிற கவிஞர் எனவும் குறிப்பு உண்டு.இவரது பாடல் ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது (குறுந்தொகை 176) .

(சங்கத் தமிழ் அறிவோம்!)

 

This entry was posted in அனைத்தும், கட்டுரை, குங்குமம் தோழி and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக