ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்

2

சக்திஜோதி
சாலையில் வேகமாகச் செல்லும் பொழுது வேகத்தடையைக் கடக்கும் சிறிய கணமொன்றில்கண்ணில் பட்டு மனதிலிருந்து அகலாமல் பதிந்திருக்கும் ஒரு காட்சி…வத்தலக்குண்டுவிலிருந்து நிலக்கோட்டை செல்லும் வழியில் மல்லனம்பட்டியில் சாலையோர பெட்டிக்கடை ஒன்றில் ஒரு பெண் குழந்தையை தூளி ஆட்டிக்கொண்டிருந்தார். இழுத்து  இழுத்து விடுகிற அவருடைய கைகள் தொட்டிலை ஆட்டியபடியிருக்க, கண்கள் தொலைவாக இன்னும் தொலைவாக  என  எங்கோ சென்று ஆழ்ந்திருந்தது. உண்மையில் அந்த கண்கள் ஆழமாக எதிலோ அமிழ்ந்திருந்தது என்பதுதான் சரி. அந்தப் பெண்ணின்  செயல் மட்டும் தூளியை ஆட்டியபடி இருக்க மனம் வேறெங்கோ நிலைத்திருக்க, அது எதுவாக இருக்குமென சாத்தியங்களை மனதுக்குள் போட்டுப் போட்டுப் பார்த்துக்கொண்டேஇருக்கிறேன்.
அந்தச் சாத்தியங்கள்… அந்தப் பெண்தொட்டிலில் ஆடிய பொழுதாக இருக்கலாம்… கொஞ்சம் வளர்ந்த பிறகு தம்பிக்கோ தங்கைக்கோ கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தான் உட்கார்ந்து ஆடிய நினைவாக இருக்கலாம்… எங்காவது மரத்தடி நிழலில் கயிறு கட்டி பலகை இட்டு ஆடிய சிறு வயது ஆட்டத்தில் மனம் லயித்திருக்கலாம்… ‘தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகை ஆளும் கை’ என்று சிறு வயதில் பள்ளியில் கை உயர்த்தி குரல் உயர்த்தி பேசிய நினைவாக இருக்கலாம். எதுவோ ஒன்று, எதுவென்று தெரியாமல்   காலம்  அவர் கண்களில் உறைந்திருந்ததை அந்த சிறுபொழுதில் உணர முடிந்தது.

எப்பொழுதும்  எல்லோருடைய  மனதிலும் இப்படி ஒரு தூளி ஆடிக்கொண்டுதான் இருக்கும். அது அம்மாவின் பழைய புடவையில் ஆனதாக இருக்கலாம். ஆலமரத்தின் விழுதாகஇருக்கலாம். மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடாமல் நம்முடைய பால்யத்தை கடந்திருக்கவே முடியாது என்றே நினைக்கிறேன்.  தாழைநார் கயிற்றாலும்  பனைநார் கயிற்றாலும்  ஊஞ்சல் கட்டி ஆடுவது ஒரு கலையாகவே இருந்தது. சில இடங்களில் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டியும்  ஊஞ்சலாடினர்.

சங்க காலத்திலும் தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊஞ்சல் கட்டி விளையாடி இருக்கின்றனர்.  ஊஞ்சலாடுதலை ஊசல் தூங்குதல் என வழங்கினர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும் [தானே தனியே உந்தி ஆடியது பற்றியும் காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும்  குறிப்புகள் உள்ளன. காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும், காதலி பொய்யாகக் காதலன் மீது விழுவது பற்றியும்] சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன.

ஊஞ்சல் ஆட்டம் என்பது ஒரு கொண்டாட்டம். அதே நேரம் அது ஒரு தவநிலையும் கூட. ஒரு நிறைவான  ஊஞ்சலாட்டம் இதை உணர வைத்துவிடும். ஊஞ்சல் மீது அமர்ந்து ஆட ஆடமுதலில் சிரிப்பும் குதூகலமுமாகத் தொடங்கும் ஆட்டம், மெல்ல மெல்ல மனம் ஒருநிலைப்பட்ட தியானம் போல மாறியிருப்பதை உணர முடியும். அதனால்தானோ என்னவோ, ஒரு காலகட்டம் வரை தெருவில், மரத்தடியில் என ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல், வீட்டின் திண்ணை,  வரவேற்பறை, மாடியின் பெரிய  கூடம், தாழ்வாரம், முற்றம், படுக்கையறை என எல்லா இடங்களிலும் ஆடவும் அலங்காரமாகவும் மாறியிருக்கிறது. சிறுமிகளின் விருப்பத்துக்குரிய பொருளாக இருந்த ஊஞ்சல் அந்த வீட்டின் தலைவனான மூத்த ஆண் அமரும் அடையாளமாக ஒரு காலகட்டத்தில் மாறிப்போனது.

கைத்திறன் வளர்க்கவும் கால் திறன் வளர்க்கவும்  நினைவு சக்தியை அதிகப்படுத்தவும் வீட்டுக்குள் விளையாடவும் வெளியில் விளையாடவும் என பல விளையாட்டுகள் நம்மிடையே இருந்தன. அப்படியான பால்ய கால விளையாட்டுகள் பலவற்றை நாம் மறந்திருந்தாலும், ஊஞ்சல் விளையாட்டின் நினைவுகள் தனித்தன்மையானவை. ஊஞ்சல், ஆடிய இடத்துக்குத் தக்கவாகவும் ஆடிய வயதுக்குத் தக்கவாகவும் நினைவுகள் ஊஞ்சலைக் காணும் பொழுதெல்லாம் முன் பின்னாக அலைந்து கொண்டேதான் இருக்கும். குறைந்தபட்சம் ஆலம் விழுதைப் பிடித்து ஆடிப் பார்க்க எந்த நேரமும் மனம் விரும்பிக்கொண்டே இருக்கும்.
இன்றைக்கு நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தினுள்ளும் கிராமப்புறங்களில் பொது விளையாட்டுத் திடலில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தவறாமல் ஊஞ்சலை பார்க்கலாம்.

இந்த இடங்களில் ஊஞ்சலாடும் குழந்தைகளின் குதூகலக் குரலையும் நாம் கேட்கலாம். இங்கே ஆடுபவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருப்பார்கள். சில இடங்களில் இது 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கானது என்கிற அறிவிப்புப் பலகையும் இருக்கும். இன்னும் சில  இடங்களில் ஊஞ்சல் மட்டும் தனித்து தானாக  காற்றில் மெல்லியதாக ஆடிக்கொண்டிருப்பதையும் பார்க்கலாம். அப்படியான தனித்த ஊஞ்சல் ஒருவிதத்தில் கைவிடப்பட்ட ஊஞ்சலாகவும், ஊஞ்சல்
விளையாட்டை விட்டு இறங்கி வெளியேறிய சிறுமிகளைத் தேடி அது காற்றில் அசைந்து கொண்டிருப்பதாகவுமே எனக்குத் தோன்றும்.

ஊஞ்சல் மட்டுமல்ல… பல்வேறு விளையாட்டுகள் பெண்களின்வாழ்விலிருந்து 12 வயதுக்கு மேல் வெளியேறி விடுவதைக்  காண முடியும். ஆடலும் பாடலும் இசையும் கூட இந்த வயதுடன் நிறைவடைந்து விடுவதாகவே இன்றைக்கும் பொதுவான சூழலாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு இந்த வயதில் அப்படி என்னதான் நிகழ்ந்து விடுகிறது? இயற்கையாக ஆண்குழந்தைக்கோ பெண்குழந்தைக்கோ உடலில் ஏற்படுகிற மாற்றங்களின் விளைவுகளைச் சொல்லித் தராமல் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை பெண்களுக்கு மட்டும் விதிக்கும் படியான சூழல்தான் இதுவரையிலும் உள்ளது.

பெண் குழந்தை என்றால் இந்த இந்த விளையாட்டுகள்தான் விளையாடவேண்டும் எனவும் இப்படித்தான் உடுத்த வேண்டும் எனவும் வழிவழியாகப் புகுத்தப் பட்டுள்ளது இன்றுவரையில் மாறாமல்தான் இருக்கிறது. அங்கங்கே தென்படுகிற விதிவிலக்குகளான பெண்களைப்பற்றிப் பேசவில்லை. தமிழிலக்கிய மரபு பெண்மையை ஏழு பருவங்களாகப் பிரித்துள்ளது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனவும், உத்தேசமான வயது முறையே 7, 11, 13, 19, 25, 31, 40  என்பார்கள். அந்த மரபுப்படி பொதுவான விதியாக பெண்களை இந்தப் பருவத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே பெண்களின் வாழ்க்கை முறையும் அமைக்கப்பட்டுள்ளதாகக் காணவும் முடிகிறது. ஏன் ஒரு பெண் விளையாட்டை விட்டு வெளியேறுகிறாள்  என கேள்வியாக ஒரே பருவத்தைச் சேர்ந்த பல பெண்களின் முன்பும் வைக்கலாம்.

வேறு வேறு பருவத்தைச் சேர்ந்த பெண்களிடமும் கேள்வியை முன் வைக்கலாம். அந்தப் பருவத்தில் அவர்கள் தொலைத்துவிட்ட விளையாட்டுகளுக்காக அம்மாவின் மடி தேடித் தவிப்பது போல எந்தப் பருவத்திலும் ஏங்கவே செய்வார்கள். குறிப்பாக பேரிளம்பெண் என்கிற நிலையில் ஒரு பெண் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பின்பு தன்னுடைய தொலைந்து போன விளையாட்டுப் பருவங்களையும் அந்தக் காலத்தின் விளையாட்டுத் தோழிகளுக்காகவும் நண்பர்களுக்காகவும் ஏங்குவார்கள்.

பால் அறியா நிலையில் விளையாடிய ஒரு பருவத்திலிருந்து கன்னிமை தளும்புகிற பெண்மைக்குள் நுழைந்த தினத்தின்  அறியாமை பற்றியும்  மனம் கசிந்து கொண்டுதான் இருப்பார்கள். ஒருவிதத்தில் விளையாட்டு என்பது அவர்களது வாழ்விலிருந்து அகற்றப்பட்டதாகச் சொல்வார்கள். அவர்கள் அறியாமலேயே வாழ்வின் சுழல் விளையாட்டில் சுழல அனுப்பப்பட்டக் கதையைச் சொல்வார்கள். மிக முக்கியமான ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக நினைத்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளோடும் வாழ்வின் அன்றாடத்தோடும் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்வாள். ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேற்றப் படுகிறாள் என்றுதான் சொல்லவேண்டும். என்னவென்றுஅறியாமலும் உணர்ந்ததைச் சொல்லத் தெரியாமலும் ஒரு சிறிய பெண் விசும்பிய கணத்தைப்  பற்றி  அஞ்சில் அஞ்சியாரின் பாடல்…

ஆடுஇயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு கெழீஇப்
பயன்இன்று அம்ம இவ் வேந்துடை அவையே.

கூத்தாட்டு நிகழ்கின்ற விழாக்களின் ஓசைமிக்க மூதூர் இது.  தொடர்ந்த கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கிறது. அதனால் குவியும்  ஆடைகளை துவைக்கும் செய்கையிலிருந்து கை ஓய்வு கொள்ளாத வறுமையற்ற தொழில் செய்திருப்பாள் அவ்வூரின் புலத்தி. இரவிலே தோய்த்து சோற்றின் கஞ்சியிட்டு் உலர்த்திய சிறிய பூத்தொழிலை உடைய மெல்லிய ஆடை உடுத்தி,  பொன்னரி மாலையும் அசைந்தாட  ஓடிச் சென்று கரிய பனைநாரினால் திரித்த கயிற்றை பிணைத்துத்தொங்கவிட்ட ஊஞ்சலில் ஏறினாள், அழகிய மெலிந்த கூந்தலையுடைய வறுமை நிலையிலிருக்கும்  ஒருத்தியின் சிறிதளவு வளையலை அணிந்தவளாகிய இளமகள் ஒருத்தி. ஊஞ்சலில் ஏறியிருந்தவளை பூப்போன்ற கண்களையுடைய அவளது தோழியர் ஆட்டினர். பின்பு தோழியர் ஊஞ்சலை ஆட்டவும் ஆடாதவளாக விசும்பி  அவ்விடம் விட்டு அகன்றாள். அவ்விளம்பெண்ணை மீண்டும் ஊஞ்சலாடுகின்ற தொழிலின் ஆரவாரத்தில் ஈடுபடுத்த விருப்பமில்லாத மக்களோடு சேர்ந்து இவ்வேந்தனின் அவைக்களம் பயனற்றதாக இருந்தது.

இந்தப் பாடல் மருதத் திணை என்பதாகக் குறிப்பு உள்ளது. மருதம் என்பதால்கொண்டாட்டம் நிறைத்த செழிப்பான ஊர் என அறியப்படுகிறது. இந்த ஊரில் வண்ணாத்தி இரவெல்லாம் துணி துவைக்கிறாள். துவைப்பதால் அவள் வறுமை அறியாமல் இருக்கிறாள். அவள் துவைத்துக் கொடுத்த பூ வேலைப்பாடுடைய உடையை அந்த ஊரிலேயே  வறுமையில் உள்ள தாயின் இளமகள் ஒருத்தி உடுத்தி ஊஞ்சலாட வருகிறாள். ஊஞ்சலை தோழியர் ஆட்டி விடுகின்றனர். இவள் ஆடாமல் விசும்பி நகர்கிறாள். இப்படி விசும்பிச் செல்கிற பெண்ணை சமாதானம் செய்து மீண்டும் விளையாட்டில் ஈடுபடுத்த மனமில்லாத மக்கள் நிறைந்த வேந்தனின் அவைக்களம்பயனற்றதாக உள்ளது.

இந்தப் பாடலில் இது தவிர வேறு தகவல் எதுவும்  சொல்லப்படவில்லை. பல்வேறு உரையாசிரியர்கள் பரத்தையின் இளமகள் ஒருத்தி தலைவனோடு ஊடல் கொண்டு ஊஞ்சலாடாது அழுதுகொண்டு செல்வதாக எழுதியுள்ளனர். அப்படிப் பார்ப்பதற்கான இடம் இருப்பதாக இந்தப் பாடலின் சூழலில் பொருந்தி வரவில்லை என்பதாலும், உள்ளுறையாக வேறு ஒன்றை குறிப்பால் உணர்த்தும் பாடலாகவும்கொள்ளலாம் எனத் தோன்ற இடமிருக்கிறது.  இன்றைக்கும் கிராமங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு பெண் பூப்பு அடைந்துவிட்டால் என்றால் ‘வண்ணாத்தி மாற்று’ என உடை உடுத்துவது உண்டு. அந்த ஊரின் வண்ணாத்தி கொடுத்த உடையை உடுத்தி தனித்து ஒதுக்கப் படுகிற சிறுமிகளை இன்று வரையில் பார்க்க முடிகிறது.

அதுவரை சிறுமியாக குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய தன்னுடைய மகள் அப்படியான ஒருபூப்பின் தினத்தில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறியதற்காக வருந்திய அவளின் தாய் எழுதிய பாடலாக இந்தப் பாடல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன் இந்த தாய் வருந்தியிருப்பாள் என்று கருதலாம் என்றால், இப்படி ஒரு கணத்தில் முதல் நாளைப் போலவே விளையாட ஓடி வருகிற சின்னவளை அங்கிருக்கும் பெரியவர்கள் விரட்டி அனுப்பியிருக்கலாம். அதனால்தான் இப்படி விசும்பிச் செல்கிற பெண்ணை சமாதானம் செய்து மீண்டும் விளையாட்டில் ஈடுபடுத்த மனமில்லாத மக்கள் நிறைந்த வேந்தனின் அவைக்களம் பயனற்றதாக உள்ளது எனச் சொல்லியிருக்கக் கூடும்.

இந்த இடத்தில் என்னுடைய கவிதை ஒன்று, பெண்ணின் ஏழு பருவங்களைப் பற்றிப் பேசுவதாக எழுதியுள்ளேன். அதில்  பெதும்பைப்பருவத்தில் ஒரு பெண் தன்னுடைய விளையாட்டுப் பருவம் என்கிற இயல்பிலிருந்து கலைகிறாள் என்பது பற்றியது…

வானத்தின் நிறமும் தன் ஆடையின் நிறமும்
ஒன்றென ஓடித் திரிகிற அச்சிறுமியின்
பள்ளி நாட்கள்
பூவைப் போல மலர்ந்து
பூவைப் போல வாசனை
பூத்தபடியிருக்கிறது
அவளுடன் நீலப்பூக்களை பூக்கச் செய்திடும்
சிநேகிதிகள் நூற்றுக்கணக்கில் சுற்றித் திரிகின்றனர்
நீலக்குடை விரித்து
நீலப் பூச்சூடி
நீல உடை அணிந்து
அவர்களது உலகம்
ஆகாயத்தை விடப்பெரிதென
மைதானத்தில் விரிந்து கிடக்கிறது
நீலவெளியாக
செம்மண் மைதானத்தை நீலநிறமாக்கி
வானத்தை இழுக்கும் நூறு சிறுமிகள்
தொட்டு  விடும்  நீல  ஆகாயத்தைக்  கண்டு  ஓடியாடுகையில்
பெதும்பைப்பருவம் தொடும் வயதினர்
கூச்சமுடன் விளையாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
செவ்வான மாலைவேளையில்
அவர்களது நீலவானமும்
நீலப்பூக்களும் பொருந்தாத நீலநிற உடையும்
இரவு வேளையில் கனவு காணத் தொடங்குகிறது.

பால்ய கால விளையாட்டுகள் பலவற்றை  நாம் மறந்திருந்தாலும், ஊஞ்சல் விளையாட்டின் நினைவுகள் தனித்தன்மையானவை.

அதுவரை சிறுமியாக குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய தன்னுடைய மகள் அப்படியான ஒரு பூப்பின் தினத்தில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறியதற்காக வருந்திய அவளின் தாய் எழுதிய பாடலோ இது?

அஞ்சில் அஞ்சியார்…

அஞ்சி என்ற இயற்பெயருடையவர் இவர். அஞ்சில் என்கிற  ஊரைச்  சேர்ந்தவர்.  இவ்வூர்  இப்போது  அஞ்சூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) எனப் பெயர்  மருவி  வழங்கப்படுகிறது. இவர்  எழுதிய ஒரு பாடல் மட்டும்தான் கிடைத்துள்ளது.

நற்றிணை: 90

(சங்கத் தமிழ் அறிவோம்!)
முந்தைய உடல் மனம் மொழி கட்டுரைகளை வாசிக்க:-

 

 

This entry was posted in அனைத்தும், உடல் மனம் மொழி, குங்குமம் தோழி and tagged , , , , , . Bookmark the permalink.

1 Responses to ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்

  1. கீதமஞ்சரி சொல்கிறார்:

    விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படும் சமயம் ஒரு சிறுமியின் வெதும்பிய மனநிலையையும் அதைக் கண்ணுறும் அவள் தாயின் இயலாமையையும் எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது பாடல். அப்படித்தான் இருக்கவேண்டும்… அது ஒரு தாயின் மனக்குமுறலாகத்தான் இருக்கவேண்டும். அந்த வயதைக் கடந்துவந்தவள்தானே அவளும்… அவள் மனமறியாதா மகளின் ஏக்கம்? நிலத்தில் கால் பாவாமல் நீந்தியாடும் ஊஞ்சல் விளையாட்டு பற்றிய வரிகள் அனைத்தும் மீண்டும் சிறுபிள்ளைப் பிராயத்துக்கு இழுத்துப்போய்விட்டன. சங்ககாலப் பெண்கள் பற்றிய உங்கள் ஒவ்வொரு பதிவும் மனத்தை நெகிழ்வுறச்செய்கின்றன. இனிய பாராட்டுகள் சக்திஜோதி.

பின்னூட்டமொன்றை இடுக