உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்

18ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்

சக்திஜோதி

பெண் என்பவள் ஆணின் ஆதார சக்தியாக எவ்விதம் இயங்குகிறாள்?  இப்படி, ஓர் ஆணிடம் கேட்டால் ஒருவிதமான பதிலையும், ஒரு பெண்ணிடம் கேட்டால் வேறு ஒருவிதமான பதிலையும் கண்டடைய முடியும். அநேகம் ஆண்கள் கிண்டலாகவும் சொல்லக்கூடும்… அநேகம் பெண்களுக்கு தாங்கள் எவ்விதம் சமூகத்தின் ஆதாரம் என்பது தெரியாமலிருக்கக்கூடும். பெண்களின் வழிவந்த சமூக இயக்கம் என்பது காலந்தோறும் மறுதலிக்கப்பட்ட ஒன்றாகும். பெண் இயக்கம் எப்பொழுதும் ஆணைச் சார்ந்தும், அவனது நிழலிலேயே தனது பாதுகாப்பை உணரும் வகையிலும் கட்டப்பட்டது. இது  கட்டப்பட்ட யதார்த்தமே அன்றி, உண்மை அல்ல.

பெண் எல்லாச் சமூகத்திலும் ஆதார சுருதியாகப் போற்றப்பட்டிருக்கிறாள் என்பதை பல்வேறு தொன்மங்கள் வெளிப்படுத்துகின்றன. பெண்ணைச் சுற்றிலும் பின்னப்படும் பாதுகாப்பு  வளையங்கள் கூட, அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை அடியொற்றியதே. நிலம் எவ்வாறு ஒரு குடியானவனுக்கு ஆதாரமாகத் திகழ்கிறதோ, அதுபோல நாகரிகமடைந்த எந்த ஒரு சமூகத்தின் வளமைக்கும் மேம்பாட்டுக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி முதன்மைக் காரணமாக விளங்கும். அதனால்தான் பெண்ணை மனித சமூகத்தின் ஆதார சக்தி என்கிறார்கள்.

ஒரு பெண் தனக்கும், சுற்றுப்புறத்தில் தன்னைச் சார்ந்திருக்கும் ஆண்கள், குழந்தைகள், தாவரங்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் தேவையான யாவற்றையும், தன்னியல்பில் தானே செய்கிறவளாக இருக்கிறாள். ஒரு குழந்தை பசிக்கு அழுகிறதா, தூக்கத்துக்கு அழுகிறதா அல்லது உடல் நோவினால் அழுகிறதா என்பதைத் தாயே அறிவாள். எறும்பு முதலாக பறவைகள், கால்நடைகள், தாவரங்கள் என எந்த சிறிய உயிருக்கும் நீர் தேடி சேகரித்துப் பங்கிடுவது, உணவிடுவது, அவற்றைப் பாதுகாப்பது என்பன பெண்ணின் இயல்பாக  இருக்கிறது. ஆண்களின் பொறுப்போ ஒவ்வொரு நிலையிலும் பிறரால்
வலியுறுத்தப்படுகிறதாகவே இருக்கிறது.

சமூகம் என்பது ஆண் மையக்கருத்துரு என்பதைத் தாண்டி, ‘பெண்தான் சமுதாயத்தின் வளமாக இருக்கிறாள்’ என்பதே உண்மை. ஒரு சமூகத்தின் வளம் என்பதும் அந்தச் சமூகத்தின் வளர்ச்சி என்பதும் அதனுடைய உற்பத்தித்  திறனையே அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. அப்படியான வளம் மிக்க சமூகமே பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கிற முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும். முதலாளித்துவ மனோபாவத்துக்கு உழைக்கும் மக்கள் தேவை. உழைக்கும் மக்களைப் பெற்று, உருவாக்கித் தருகிற சக்தியாக பெண்ணை மென்மேலும் பண்படுத்தவே, பெண் ஒருவிதத்தில் போற்றப்படுகிறவளாக இருக்கிறாள்.

சங்க காலச் சமுதாயத்தில் தம் இனக்குழு வாழ்வின் நிலைப்பேற்றுக்காக வேறு இனக்  குழுவுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருந்தது. தன் இன மக்களுக்காக அவர்களின் உடைமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பும், அதற்கான சண்டையை, ஒழுங்குபடுத்தப்பட்ட போர் நிகழ்வுகளாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியமும் அக்காலத்தில் இருந்தது. அதனால் சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் என்கிற வகைமை வளர்ந்தது. போர் நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளும் கருத்துருவாக்கங்களும்  அதற்கான பேச்சுகளும் நிகழ்வுகளும் இதன் வழியே  வளர்ச்சியடைந்தன. தமிழ் மரபின்  வரலாற்று ஆதாரங்கள் பலவும் புறப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.

சங்கப் பாடல்கள் என்றால் காதல் மட்டும் அல்ல… ஒரு சமூகத்தின் கட்டமைப்பில் அதன் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு பற்றி சங்கப் பெண்பாற் புலவர் பொன்முடியாரின் ஒரு பாடல் இது…

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே…’

‘ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்துத் தருவது என்னுடைய முதலான கடமை. அந்தக் குழந்தையை நற்பண்புகள் நிறைந்த சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை. கூர்மையான வேல் செய்து கொடுப்பது கொல்லர்க்குக் கடமை.  நல்லாட்சி புரிவது மன்னனுக்குக் கடமை.

போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றி பெறுவது இளைஞனுக்குக் கடமை’ என்று இப்பாடலுக்கு முதல் பார்வையில் அர்த்தம்
சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் முதன்மை, தலையாய என்பதைக் குறிக்கும் ‘தலைக்கடன்’ என்கிற சொல் இங்கே பெண்ணுக்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடவனுக்கும் கொல்லனுக்கும் அரசருக்கும் இளைஞனுக்கும் மற்றவருக்கும் கடமை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் முதன்மைப் பண்பைக் குறிப்பிடுவதற்கும், பின் வருகிற அத்தனை செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்குமான சொல்லாக, ‘தலைக்கடன்’ என்கிற சொல் குறிப்பிடப்படுகிறது என்று சொல்லலாம். ஆண் மையச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்ட சங்க காலத்தில் ஆணின் பொறுப்புகள் குறித்து ஒரு பெண்ணின் குரல் இவ்வாறாக வெளிப்படுகிறது.

ஒரு ஆண் – தந்தையாக இருந்தாலும், மன்னராக இருந்தாலும், கொல்லராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும், பெண்ணின் வழிநின்றே அடிப்படையான வாழ்வியல் கல்வியும் பொறுப்புகளும் கையளிக்கப்பட்டு மேன்மைப் படுத்தப்படுகிறது.   ஒரு பெண் எவ்விதம் மையமாக இன்றைக்கு இருக்கிறாள்? பெண்ணே குழந்தைகளை வளர்க்கிறாள். குடும்பத்தை நிர்வாகம் செய்கிறாள். தொழில், ஊடகம், அரசியல் என பல துறைகளில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்… இப்படிப் பல பதில்களை நாம் பெற முடியும்.

சமீபத்தில் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். ‘மேகவர்ணம் என்கிற பூங்கோவை’ என்று  தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார். தன் பெயர் பற்றி அவருக்கு மிகப்பெருமை என்றும் சொன்னார். அவருடைய மிகத்தெளிவான உச்சரிப்பும் சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுகிற குழப்பமற்ற பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிப் பேசுவது நிறைய பேருக்குக் கை வருவதில்லை என்பது என்னுடைய எண்ணம்.

‘அப்புறம் என்ன இந்தப் பக்கம்’, ‘இன்னைக்கு உங்க முகம் கொஞ்சம் வாடியிருக்கிறாற்போல இருக்கே’, ‘உடம்புக்கு எதுவும் சரியில்லையா’, ‘உங்கள் குரல் என்னவோ போல இருக்கேங்க’, ‘எதுனா பிரச்னையா’ எனத் தொடங்கும் பெரும்பாலான பேச்சுகள் எல்லாம் எதிரே இருப்பவரிட மிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெறுவதற்கான தொடக்கமே. நமக்கு ஒருவரிடமிருந்து ஒரு தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால்,  ‘என்னங்க… உங்களைப் பற்றி இன்னார், இப்படிச் சொன்னார், என்ன விஷயம்’ என்று நேர்படத் தொடங்குவதில்லை. வேறு எங்கோ பேச்சைத் தொடங்கி, ஊர்வம்பு பேசி, எதிரே இருப்பவர் தன் வாயாலேயே நாம் விரும்பும் அந்தச் செய்தியை சொல்லுகிறாரா என ஆராயும் மனோபாவம்  பலருக்கு இருக்கிறது. இது போல இல்லாமல், பூங்கோவை தன்னைப் பற்றி சொல்லி, என்னைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்ட உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. இதனால் மட்டுமல்ல… அந்த உரையாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கியமான வேறு ஒன்றும் உண்டு.

அவரிடம் நான், ‘என்ன படிச்சிருக்கீங்க’ எனக் கேட்டேன்… சற்றும் யோசிக்காமல், ‘நான் நல்லா விவசாயம் செய்வேன்’ என்றார் அவர்.  மேலும், அவரே தொடர்ந்தார்… ‘தென்னை, நெல், கத்தரிக் காய், வாழை, மிளகாய், தக்காளி… இப்படி  எல்லாப் பயிர்களையும் எந்தப் பருவத்தில் விதைக்கணும், களை எடுக்கணும், மருந்து தெளிக்கணும், அறுவடை செய்யணும் என ரொம்ப தெளிவாத் தெரியும்’ என்றார். ‘என்னுடைய படிப்புன்னா, அது நிலத்துல இறங்கி விவசாயம் செய்யுறதுதான்’ என்றார். ‘அப்பா ஏர் பிடித்து உழ, அம்மா நிலத்தில் இறங்கி விதை தூவவும் களை பறிக்கவும் என இருப்பார். அதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.

அறுத்த நெல் கதிரை அம்மா களத்தில் சேர்க்க,  அவற்றை அப்பா அடித்து தானியங்களாக பிரித்தெடுக்க, பின்பு இருவரும் சேர்ந்து சேகரிக்க, அதைப் பார்த்து விவசாயம் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார். ஆண்கள் பலரும் விவசாயத்தை விட்டு வேறு பணிக்குச் சென்றுவிட்ட இந்தக் காலத்தில், அடுத்த தலைமுறைக்கான தானியங்களைச் சேமித்து வைக்கிற ஆதித் தாயாக இந்தப் பெண்ணை அப்போது உணர்ந்தேன். ஒருகணம் கண்கள் மூடி அவரை  வணங்கினேன். இவரைப் போன்ற பெண்களே இந்த சமூகத்தின் மையமாகத் திகழ்கிறார்கள்.

இது நிலா, இது வானம், இது கடல், இது பூ, மலை, மரம், செடி, கொடி, ஆடு, மாடு என நாம் வாழும் சூழலையும் நம் சூழலின் சுற்றுப்புறத்தையும் அனேகமாக நம்முடைய மூன்று வயதுக்குள் தெரிந்து கொள்கிறோம். இதனைத் தெரிவிப்பவர் பெரும்பாலும் அம்மாவாகவே இருப்பார். மூன்று வயதுக்குள் நாம் தெரிந்து கொண்ட  பலவற்றுக்குத்தான் பின்னாட்களில் அறிவுநிலை சார்ந்த விளக்கம் அறிந்து கொள்ளும்படியாக கல்வி நிலையங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன. அதன்பின்பே சமூகம் தன்னுடைய அனுபவம் சார்ந்த கற்பித்தலைச் செய்கிறது. இவ்விதமாகவே ஒருவர் தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறார்.

ஓர் ஆண் மன்னனாக நல்ல ஆட்சி நல்கவும் ஓர் ஆண் வீரனாக தன்னுடைய இனத்தையும் நாட்டையும் காக்கவும் ஓர் ஆண் சான்றோனாக சமுதாயத்தில் உயர்வு பெறவும் ஒரு பெண்ணே வழிப்படுத்துகிறாள்.

பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கிற
முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும்.

யார் பொன்முடியார்?

இவர் ஆணா, பெண்ணா என்கிற விவாதம் கூட ஏற்பட்டிருக்கிறது. சங்கப் பாடலில் இவர்  எழுதிய 3 கவிதைகள் தவிர, புறத்திரட்டில் தகடூர் யாத்திரையில் 3 பாடல்கள் உள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தகடூர் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியை, அவருடைய தம்பி சேரநாட்டை ஆண்ட பெருஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொள்கிறார். சேர அரசன் இரும்பொறையை பொன்முடியார் பாராட்டிப் பாடி இருப்பதால், இவர் சேர நாட்டைச் சேர்ந்த பெண்ணாக  இருக்கலாம் எனக் கருதுகின்றனர். பண்டைய சேரநாட்டில் பொன்முடிநல்லூர் என்று ஓர் ஊர் இருந்திருக்கிறது. இவ்வூர் பெயர் இவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இப்போதைய தர்மபுரியே பண்டைய காலத்தில் தகடூர்.

அந்தந்த ஊர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர் அந்தந்த ஊர் மக்களுக்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும், அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (கி. ஸி. ழிஷீ. 205 ஷீயீ 1919) கூறுகிறது. பொன்முடியார் என்கிற இந்தப் பெண்பாற் புலவரை பண்டைய அரசுகளின் கொள்கைகளை அறிந்த சமூக அரசியல் அறிவுடன் செயல்படுபவராகவும் கொள்ளலாம்.

(சங்கத் தமிழ் அறிவோம்!)

 

This entry was posted in அனைத்தும், உடல் மனம் மொழி, கட்டுரை, குங்குமம் தோழி and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s