ஒரு பெண் திடப்படுகிறாள்

15

ஒரு பெண் திடப்படுகிறாள்

சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குணநலன்களோடு ஒரு பெண் வளர்வதும் அதனைப் பின்பற்றி நடப்பதும்தான் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீறி நடப்பது என்பது அவர்களுக்கு ஆபத்தையும் துயரையும் தரும் என பெண்களிடமும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.ஒரு பெண் வளரும் பொழுது சமூகம் வரையறுத்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றியே வளர்க்கப்படுகிறாள். திருமணம் செய்து கொடுத்து ஒருபெண்ணை வழியனுப்பும் பொழுதும், ஆணுக்கு இயைந்து நடப்பதற்கான அறிவுரைகளுடன்தான் வழியனுப்பப்படுகிறாள். ஆண்களுக்கு அவ்விதமான அறிவுரைகள் இருப்பதாகத் தெரியவில்லை –
திருமண வாழ்வில் ஒருபெண் எதையெல்லாம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்பதும் எப்போதெல்லாம் கணவனை அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவளுக்கு திருமணத்துக்கு முன்பாகவே ஓரளவு தெரிந்திருக்கும். யானைகளுக்கு வழித்தடம் அதன் மரபணுக்களில் இருக்கும் என்பார்கள். அதுபோல பெண்களின் வாழ்வியல் முறை அம்மாவிடமிருந்தும் அவளுக்கு அம்மாவிடமிருந்து வழிவழியாகக் கடத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.

என்னதான் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லியனுப்பினாலும் எவ்வளவுதான் ஒரு பெண் அனுசரித்துக் கொண்டாலும் பெரும்பாலான குடும்பங்களில் பிளவு ஏற்படாமல் இல்லை என்பதே உண்மை. அந்தப் பிளவு என்பது அனேகமாக கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதில்தான் தொடங்குகிறது. தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் மட்டும் ஆண்டுக்கு 8.82 சதவிகிதம் பதியப்படுகின்றன. இதில் 70 சதவிகிதம் வரையில் அந்த ஆணுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இங்கே கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், பொதுவாக பெண்கள் குழந்தைகளுக்காகவும் அடிப்படையான வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் ஆண்களைச் சார்ந்து இருக்கிறார்கள். இவர்கள் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கும்போது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எனில், வெளியில் சொல்லமுடியாமல் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அடங்கியிருக்கும் பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதைத் தெரிந்த பின்னும் தனக்கு வாய்த்த வாழ்க்கை இவ்வளவுதான் என்று தொடர்ந்து அவனுடன் இணைந்து வாழும் பெண்கள்தான் காலம் காலமாக இருக்கிறார்கள்.

கவிஞர் சே.பிருந்தாவின் கவிதை ஒன்று  நினைவுக்கு வருகிறது…

‘ஒருவரும் அறிந்திருக்கவில்லை
என் கண்ணீரை
இந்த இரவு ஏன்
இவ்வளவு துக்கம் மிகுந்து
ஒற்றை நஷத்ர ஒளிர்வில்
காற்று நடுக்க
சத்தமற்ற இந்த விசும்பல்
மிக அருகே உனது கரம்
செத்த உடலிலிருந்தது போல
நீ உறங்கிக்கொண்டிருந்தாய்
நீ அறியாத என் துக்கம்
வலி மிகுந்தது…’

ஓர் ஆண் இருந்ததையும் இல்லாமல் இருப்பதையும் இந்தக் கவிதை பேசுகிறது. அவனது உயிரும் உடலும் ஒன்றாக அவளிடத்தில் இயங்கும் நிலையிலிருந்து இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளி மிகப்பெரிய பிளவாக, மீள இயலாத துக்கமாக அவளிடத்தில் இருப்பதைக் கூட அறிய இயலாதவனாக ஆண் இருக்கிறான் என்பதை இந்தக் கவிதையில் உணரமுடிகிறது.

80களில் மகேஷ் பட் இயக்கி வெளியான ‘அர்த்’ திரைப்படத்தில் இப்படியான நிலையிலிருக்கும் ஒரு பெண் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ கணவனை ஏற்றுக்கொண்டு வாழாமல் தனக்கான தனித்த அடையாளத்தைத் தேடி வாழத் தொடங்குவதாக அமைந்திருக்கும். இந்தப் படம் பார்த்த காலகட்டத்தில் இப்படியான பெண்களும் இங்கே இருக்கிறார்களா என நான் நினைத்துக் கொண்டேன். பின்னாளில் இந்தத் திரைப்படம் ‘மறுபடியும்’ என பாலுமகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியானது.

சங்க இலக்கியத்தில் பரத்தையரிடம் சென்று திரும்பி வந்த தலைவனுக்குச் சார்பாக தலைவியிடம் தூது வந்த தோழியிடம், தலைவனுக்கு அனுமதி மறுத்து தலைவி கூறுவதாக அமைந்த அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்…

‘நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃதெவனோ அன்பிலங் கடையே…’

தலைவியிடம்  தலைவன் மீது ஊடல் கொள்ள வேண்டாம்  என்றும் தலைவனின் பரத்தமையை மறந்து ஏற்க வேண்டும் என்றும் தோழி வேண்டுகிறாள். தலைவியோ, ’தோழி! நல்ல பெண்மை நலம் கெடவும், உடல் மிக மெலியவும், இனிய உயிர் நீங்குமாயினும் அவர்பால் பரிவுகூர்ந்த சொற்களை சொல்லுதல் வேண்டாம். தந்தையும் தாயும் போல நான் வழிபடத் தக்கவர்தான் தலைவன். ஆனால், ஊடல் கொள்ளும் அளவு அன்புடையவர் அல்லர். அவ்விதம் அன்பில்லாத இடத்தில் ஊடலால் பயன் ஏதும் இல்லை’ என்ற கருத்தை கூறி தலைவனிடமிருந்து விலகிநிற்கும் தன்மையை காட்டினாள். இதன் குறிப்பு தலைவி தலைவனுக்கு வாயில் மறுத்ததைக் குறிப்பதாகும்.

இந்தப் பாடலை வேறு ஒரு விதமாக அணுகலாம்… ‘நல் நலம்’ என்பது பெண் தன்மைக்கு இயல்பாகிய நாணத்தைக் குறிப்பதாகும். அந்த நாணம் அழிந்தது. ஏனெனில், தன்னுடைய அந்தரங்கமான உறவு பற்றி அவன் தன்னை விட்டுச் சென்றது பற்றியெல்லாம் வெளியில் சொல்ல நேர்ந்தது. ‘நலம் மிகச் சா அய்’ என்ற தொடரில் உள்ள நலம் என்ற சொல் தலைவியின் மேனி அழகை உணர்த்துவதாகும். தலைவனின் பிரிவு என்பது பொருள் தேடுதல் போல இயல்பான ஒன்றாக இல்லாமல் பரத்தையர் காரணமாக பிரிந்ததனால் ஏற்பட்ட அதிகப்படியான துயரில் தலைவியின் உடல் அழகு மறைந்தது.

நாணமும் அழகும் அழிந்ததால் அவள் உயிரும் உருகி நிற்கிறாள். ‘தாயாகவும் தந்தையாகவும் தலைவனே  இருக்கிறான். இதை அவனும் அறிவான். அவனே அவளைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கூடியிருக்க பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியை மறந்து பரத்தையர் மார்பில் தோய்ந்திருக்கும்படி அவன் மனம் எவ்விதம் சென்றது? தலைவியிடத்து முழுமையான அன்பு இருந்தால் இவ்விதம் சென்றிருப்பானா? மனம் ஒன்றியிருக்கும் காதலரிடம்தானே ஊடலுக்கு பின்பு பேரின்பம் விளையும்? அன்பே இல்லாதவரிடம் ஊடல் கொள்வதால் ஒருபயனும் இல்லை. தலைவனிடத்தில் தனக்கு எந்த ஊடலும் கிடையாது… எனவே, ஊடல் கொண்டிருப்பதாகச் சொல்ல வேண்டாம்’ என தோழியிடம் தலைவி சொல்வதாக இப்பாடலைப் பார்க்கலாம்

‘என்னைவிட்டு போகாதே… என்னிடமே வந்துவிடு… காலில் விழுகிறேன்… இனி நான் சண்டை எதுவும் போட மாட்டேன்… உனக்குப் பிடித்த மாதிரி எல்லாம் நடந்து கொள்கிறேன்’ என பதற்றப்பட்டு தன்னிலையிலிருந்து தாழ்ந்து அழுது புலம்பாமல், தலைவனிடமிருந்து சற்று விலகி நின்று, அவனிடம் தனக்கு ஊடலே இல்லை என்று சொல்கிற இந்தப் பாடலின் குரல் மிக
முக்கியமாக எனக்குத் தோன்றியது.

இதை எழுதும்போது எனக்குத் தெரிந்த சின்னத்தாயி என்கிற ஒரு ஆச்சி நினைவுக்கு வருகிறார். அவர் தன்னுடைய இரண்டாவது பிள்ளையின் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்குச் சென்றிருக்க, அந்த நாட்களில் அவருடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். குழந்தையோடு வீடு திரும்பிய சின்னத்தாயி ஆச்சி கணவனின்
செயலைத் தெரிந்து கொண்டார். அதன் பின்பு ஒருபோதும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. ஆனால், தினந்தோறும் காலை, மதியம் மட்டும் வீட்டுக்கு வந்து, அவருடைய சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு சாப்பிட வேண்டும்… இரவு படுக்கைக்கு அவரோடு உறவு கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று விடவேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் வாழ்கிறார்கள். இவர்களுடைய இந்த ஒப்பந்தத்தின் வயது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள்.

அந்த ஆச்சி எனக்கு அறிமுகம் ஆன புதிதில் அவர்களின் வாழ்வு எனக்குக் கேள்வியாக இருந்தது. இந்த தாத்தா காலை, மதியம் வருகிறார். சாப்பிடுகிறார். பேத்திகளிடம் பேசுகிறார். மகள்களிடம் பேசுகிறார். ஆச்சியிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் சாப்பிட்ட இடத்தில் காலையில் ரூபாய் பதினைந்தும் மதியம் ரூபாய் இருபதும் வைத்துவிட்டு எழுந்து போகிறார். அவர் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுக்கிறார். இவர்களுக்குள் என்ன பிணக்கு அல்லது என்ன உறவு என எனக்குக் குழப்பமாக இருந்தது. ஒருநாள் நானே அந்த ஆச்சியிடம் கேட்டேன். அப்போது இந்தக் கதையைச் சொன்னார்கள். ஏன் இப்படி ஒரு ஒப்பந்தம் என அவரிடம் கேட்டபோது , ‘பெண்தான் மனதாலும் உடலாலும் வலுவானவள்… ஆனால், அது அவளுக்குத் தெரியவே தெரியாது. அதை அவள் தெரிந்து கொள்ள இந்த ஊரும் மனுஷரும் அனுமதிக்க மாட்டாங்க. ஒருவேளை அதை அவள் தெரிந்து கொண்டாள் என்றால் இந்த ஊருல ஒரு ஆம்பளயும் ஒரு தப்பும் பண்ணமாட்டான்’ என்று சொன்னார்.

மேலும் ’என் மீது முழுமையான அன்பிருந்தால் என்னை விட்டு இன்னொரு பெண்ணிடம் போயிருப்பாரா? இப்படி ஒரு காரியம் பண்ணினா பொம்பள நொந்து போவான்னு தெரியாம என்னைத் தவிக்க விட்டு போனாரில்லையா? இனி அவர் காலமெல்லாம் என்னை பார்த்துப் பார்த்து நொந்துபோகணும்…என்னைத் தொடவே கூடாது… பேசவே கூடாது… ஆனா, ஊரு உலகத்துக்கு இவர்தான் என் புருஷன்’ என்று சொன்னார். கிட்டத்தட்ட 70 வயதில் இருக்கும் சின்னத்தாயி ஆச்சி எனக்கு இன்றளவும் ஆச்சரியமான பெண்ணாக இருக்கிறார். இந்த ஆச்சிக்கு சங்க இலக்கியம் தெரியாது. குறுந்தொகை தெரியாது. அள்ளூர் நன்முல்லையார் என ஒரு பெண்ணைத் தெரியாது. ஆனால், மரபணுப் பாதையில் ‘ஊடலே இல்லை’ என்று தன்னிலையில் நிமிர்கிற குரலை அள்ளூர் நன்முல்லையாரிடமிருந்து இவர் பெற்றிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது.

திருமணம் என்றவுடன் ஆணைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடுதான் ஒரு பெண் இருக்கிறாள். காலங்காலமாக ஆணின் அலைபாய்கிற மனதினை அவள் அறிந்திருந்தாலும் தனக்கு ‘இப்படி’ நேராது என அந்தப் பெண் நம்புகிறாள். இவ்விதமான சூழல் தன்னுடைய வாழ்வில் தனக்கே நிகழும்போது மிகத் தளர்ந்துவிடுகிறாள். ஆனால், தன்னைத்தான் உணர்ந்துகொள்கிற பெண் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் பின்னால் மேலும் திடப்படுகிறாள்.

‘பெண்தான் மனதாலும் உடலாலும் வலுவானவள்… ஆனால், அது அவளுக்குத் தெரியவே தெரியாது. அதை அவள் தெரிந்து கொள்ள இந்த ஊரும் மனுஷரும் அனுமதிக்க மாட்டாங்க. ஒருவேளை அதை அவள் தெரிந்து கொண்டாள் என்றால் இந்த ஊருல ஒரு ஆம்பளயும் ஒரு தப்பும்பண்ணமாட்டான்’

அள்ளூர் நன்முல்லையார்

நன்முல்லை என்பது இவரது இயற்பெயராக இருக்கலாம். அள்ளூரென்பது பாண்டி நாட்டு சிவகங்கை பகுதியில் உள்ள ஊர். தஞ்சை மாநாட்டிலுள்ள திருவாலங்காட்டுக்கும் அள்ளூரென்பது பெயரென அவ்வூர்க் கல்வெட்டு (A. R. No. 79 of 1926) கூறுகிறது. திருநெல்வேலி கோயில் கல்வெட்டொன்றிலும் (S.I.I. Vol.V.No.438) அள்ளூர்  ஒன்று காணப்படுகிறது. ‘ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என், ஒண்டொடி…’(அகநா. 46) என இவரே பாடியிருக்கிறார் என்பதால் இவர் பாண்டி நாட்டு ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஊரின் பெயருடன் ’அள்ளூர் நன்முல்லையார்’ என அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் பாடியதாக 11 பாடல்கள் சங்க இலக்கியத்தில் கிடைத்துள்ளன.
அகநானூறு: 46,  குறுந்தொகை: 32, 67, 68, 93, 96, 140 157, 202, 237, புறநானூறு: 306.

மனம் ஒன்றியிருக்கும் காதலரிடம்தானே ஊடலுக்கு பின்பு பேரின்பம் விளையும்? அன்பே இல்லாதவரிடம் ஊடல் கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

திருமணம் என்றவுடன் ஆணைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடுதான் ஒரு பெண் இருக்கிறாள். காலங்காலமாக ஆணின் அலைபாய்கிற மனதினை அவள் அறிந்திருந்தாலும் தனக்கு ‘இப்படி’ நேராது என அந்தப் பெண் நம்புகிறாள்.

(சங்கத் தமிழ் அறிவோம்!)

 

 

 

This entry was posted in அனைத்தும், கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s