‘கடலோடு இசைத்தல்’ – ஒரு பார்வை

 
கவிதையில் அகம், புறம் என்னும் கூறுகள் உண்டு. அகம் பாடுவது புதியதல்ல. சங்க காலம் முதலே தொடர்ந்து வருகிறது. ‘அக நாநூறு’ என்னும் தனித் தொகுப்பும் சான்றாக உள்ளது. இன்றும் அகம் பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் எத்தனை விழுக்காடு கவிதை இருக்கிறது என்பது ஆய்வுச் செய்யப்பட வேண்டியுள்ளது. அகத்தைப் பேசினாலும் அழுத்தமாக, அழகாக, கவிதையாக பேசுபவர்கள் இல்லை. இக்கலையில் தனித்து விளங்குபவர் கவிஞர் சக்தி ஜோதி. ‘நிலம் புகும் சொற்கள்’ தொகுப்புக்குப் பிறகு அளித்துள்ள இரண்டாம் தொகுப்பு ‘கடலோடு இசைத்தல்’. முதல் தொகுப்பின் தொடர்ச்சியாகவே உள்ளது. 
 
‘பழமை’ என்னும் முதல் கவிதையே கடலைப் பாடுகிறது.
கடலின் பழமைக்குக்
கடலே சாட்சி என்கிறார். கடல் பழமை வாய்ந்தது என்பதை விட பெருமையும் பெற்றது.
ஆழ்கடலின் மௌனத்தைக்
கலைத்துக் கொண்டிருக்கிறது
காற்றலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறியீடாக உள்ளது. மனம் மௌனமாக இருந்தாலும் கலைப்பதற்கான காரணங்கள் உள்ளன என்கிறார். தொடர்ந்து ‘கடலோடு இசைத்தல்’ இல்
நிலத்தின்
வாசல் திறக்கிறது
கடல் புகுகிறது
கடலின்
வாசல் திறக்கிறது
நிலம் நிறைகிறது என்கிறது. நிலமும் கடலும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்தும் பரிமாறியும் வாழ்கிறது என்று குறிப்பிடுகிறார். நிலம், கடல் என்பதும் குறியீடாகக் கையாளப்பட்டுள்ளது. ‘கடலை அறிந்தவள்’ என்றாலும் அறியாமலும் அறிந்துமே உள்ளாள் என்கிறார். இக்கவிதை ஒரு ‘சிறுமி’யை வைத்து எழுதப்பட்டுள்ளது. இத்தொகுப்பு கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பற்றிய கவிதைகள் கடல் போல் வாசக மனத்தில் அலை வீசுகின்றன. வாசக மனத்திலும் அலை எழுப்புகின்றன. 
மழை பெய்வதும் நிலம் புகுவதும் இயற்கை. மழையை மண் உள் வாங்கிக் கொள்கிறது.
தன் மேல் படரும்
ஆண் வாசமென்று
வெட்கத்துடன் மலர்கிறது நிலம் என கவிதையாக்கியுள்ளார். நிலத்தைப் பெண்ணாக்கியுள்ளார். மண்ணை ஒரு ‘மனுஷி’ யாகவே பார்த்துள்ளார். மழைக்காகவே மண் காத்திருக்கிறது என்கிறார் . ‘மழைப் பொழுதி’ல் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மகளோடு மழையில் நனைந்ததைப் பற்றி எழுதியதில் அவர் ஆனந்தப் பட்டதை அறியமுடிகிறது. மழையில் நனையும் பொழுது மகள் தானாகவும் தான் மகளாகவும் மாறியதைக் குறிப்பிட்டுள்ளது கவனிப்பிற்குரியது. மழை விடவில்லை என்கிறார். கவிஞரும் மழையை விடவில்லை. மகளுக்கும் தாய்க்குமான உரையாடலாக அமைந்த கவிதை ‘கேள்வியும் பதிலும்’. நீரை ‘ருசி’ என்கிறார். நீர் அருந்துவதை ஆனந்தம் என்கிறார். ஆனந்தமே சுதந்திரம் தருகிறது என்கிறாள் மகள். 
பரிசாக விலை உயர்ந்த பொருளை மட்டும் தர வேண்டியதில்லை. பரிசாக வழங்கப்படும் பொருளில் விலையைப் பார்க்கக் கூடாது. அன்பையே பார்க்க வேண்டும். அன்பும் காதலும் இருக்ககுமானால் ‘காலணி’யும் பரிசு பொருளாகும். ‘நீ அறியாத பரிசு’வில் ‘காலணி’யைப் பரிசு பொருளாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
காலணியை அன்பின் குறியீடாக
பாதுகாப்பின் அடையாளமாகக் கற்பிதம் கொண்டிருந்தேன்
காலணியை
காதலுக்குரிய பரிசு பொருளாக மாற்றிச் சென்றிருக்கிறாய் காலணிக்கும் ஓர் உயர்ந்த இடத்தை இக்கவிதைப் பெற்றுத் தந்துள்ளது. காலணியை தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடாக காட்டப்பட்டு வருவதை மறுத்துள்ளது.
நீரில்லா நிலைமையைத் ‘தண்ணீர்’க் கவிதைக் காட்டியது .ஒரு புறம் நீரில்லா நிலை. நீருக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மழையை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் கடல் அனைத்தையும் மூழ்கடித்து விடுகிறது. இய்றகையை எப்போதுமே மனிதர் மீற முடியாது. இயல்பாகவே இருந்தது ‘தண்ணீர்’ . ‘ரிஷி மூலம்’ கவிதையில்
பிறந்த குழந்தை பருகும் முதல் துளி நீரில்
துவங்குகிறது அதன் தேடல் என்கிறார். தண்ணீர் எப்போதுமே தேவையானது என்பதுடன் அதை தேடியே அடைய வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.
‘பறவையும் பூட்டும்’ மனிதர்களுக்கானது.
ஒருவரும்
புரியா உலகத்தில்
புரிந்து கொண்ட படி
நடனமாடுகின்றன
அனைத்துக் கால்களிலும்
பூட்டப்பட்டிருக்கிறது
ஒரு பூட்டு கால்களை புரியச் செய்கிறார். கால்களுக்கு புரிதல் ஏற்படுத்தியுள்ளார். புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
மனிதர்களுக்குள் நல் உறவு தேவை. ஓருவரை ஒருவர் புரிந்து செயல்பட வேண்டும். புரிதல் இல்லாத போது கசப்புணர்வே ஏற்படும்.
ஒரு
கசப்புணர்வு
தடுப்புச் சுவர்களை
எழுப்பிய படியிருக்கிறது என ‘மீள்தல்’ கவிதையில் எழுதியுள்ளார். உறவில் ஒரு முறை விரிசல் ஏற்பட்டால் விரிசல் பெரிது ஆகவே செய்யும். ஆயினும் பெருஞ்சுவர்களை தகர்த்திட விரும்புவதாகவே குறிப்பிடுகிறார்.
மனசிலிருக்கும் வெறுப்பு
நிலமெங்கும் எழுப்புகிறது ஒரு சுவரினை என ‘‘தடைகள்’ கவிதையிலும் கூறியுள்ளார். சீனப் பெருஞ் சுவர் பற்றிய கவிதையில் அதில் நிகழ்ந்த மரணங்களையே வெளிச்சப்படுத்தியுள்ளார். மரணங்கள் பதிவாக்கப்படவில்லை என வருந்தியுள்ளார்.
கிளிகளைப் பற்றி பேசியுள்ளது ‘கிளி புராணம்’. மீனாட்சி , காமாட்சி, ஆண்டாள் ஆகியோரிடமிருந்த கிளிகளைப் பற்றி பேசி தற்போது கூடடையாதது பற்றியும் கூடடைந்தது பற்றியும் பேசியுள்ளார். கூடடையாதது வானில் பறக்கிறது. அடைந்ததோ அடிமையாகவே இருக்கிறது என்ற இரு வகையானவற்றையும் கூறியுள்ளார்.
பெண்களை நிலவுடன் ஒப்பிடுவது தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நிலவுடன் ஒப்பிட்டு சுயமாய் இயங்கும் சக்தி படைத்தவள் என பின்னுக்குத் தள்ளி விடும் முயற்சியாகவே உள்ளது. கவிஞரோ ‘நிலவென்று சொல்லாதே’ என கோபமாகவே உரைக்கிறார்.
என்றென்றும்
பெண் நிலவாயிருக்க விரும்பவே மாட்டாள்
அவள்
சூரியன்களைப் பிரசவிப்பவள் என பொங்கி எழுந்துள்ளார். சூரியன்களைப் பிரசவிப்பவளும் ஒரு சூரியனாகவே இருப்பாள். இனிவரும் காலங்களிலாவது பெண்ணை நிலவுடன் ஒப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும் ‘பெண்’ கவிதையில்
பஞ்ச பூதங்களாய இருக்கிறேன்
எனக்கென
சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை என கவலையுற்றுள்ளார் . தொகுப்பின் முடிவிலுள்ள ‘பெண்மை பற்றி சில கவிதைகள்’இல்
சிவப்பிலான உடை
இனி என் அடையாளமாகப் போகிறது என எச்சாpத்துள்ளார். பெண்கள் சார்பாக குரல் எழுப்பியுள்ளார்.ஒவ்வோர் உள்ளத்திலும் அன்பு இருக்கிறது. நபருக்கு நபர் சதவிகிதத்தில் வேறுபடும். ஆனால் வெளிப்படுத்த தெரியாததாலே பெரும் பாலான உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. அன்பை வெளிப்படுத்த சொற்கள் உண்டோ? இல்லை ‘கடத்தல்’ கவிதையில்
ஒரு போதும்
உணர்ந்த அன்பை
சொற்களில் வெளிப்படுத்த முடிந்ததில்லை என கூறியிருப்பது உண்மையே. இறுதியாக
ஒரு துளி
கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது
அன்பு என்கிறார்.கண்ணீர் வழியாக அள்பைக் கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அன்பலான சொல்’லில்
பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே என அன்பைக்காட்டுகிறார். அன்பிலான சொல் தீர்ந்து போகாததது என்கிறார். ‘தனிமையின் வெளி ‘யில் பிரியங்களுக்கு
இணையான வார்த்தைகள் எதுவும்
இல்லையென மொழி உணர்த்துகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ‘தனிமையின் வெளி’ கவிஞருக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்று அறிய முடிகிறது.
எப்பொழுதுமே
தென்றல் வீசுவதில்லை எனத் தொடங்கும் ‘தருணம்’
எப்பொதும்
ஜன்னல் கதவுகள்
திறந்தே இருப்பதில்லை என முடிகிறது. இரண்டு முரண்பட்ட தருணங்களை எடுத்து வைக்கிறார். தென்றல் வீசும் போது ஜன்னல் திறந்திருப்பதில்லை. ஜன்னல் திறந்திருக்கும் போது தென்றல் வீசுவதில்லை . தருணம் வாய்க்காமலே காலங்கள் கடந்து கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளார்.
காலங்காலமாக
வாழ்வோமென்ற நம்பிக்கையில்
கட்டப்பட்ட
மூதாதையரின் வீடு
சலனங்களேதுமற்றிருக்கிறது
‘கனவுகள் புதைந்த வீடு’ மூதாதையரின் நம்பிக்கை வீணாகியதற்காக வருத்தப்ட்டுள்ளார்.ஆயிரம் கனவுகளுடன் ஆசையாய் வீடு கட்டுபவர்கள் வீட்டில் வாழ முடிவதில்லை. மரணம் உள்பட காரணங்கள் பல.
‘தாலாட்டு’ கவிதைப் பிரிவைப் பாடியுள்ளது. பிரிவின் வேதனையைக் கூட வன்மையாக பேசாமல் மென்மையாக பேசியுள்ளார். பிரிந்து சென்ற போதிலும் எங்கேயோ உறங்குவதற்கு இங்கிருந்தே விசிறுவதாக கூறி தன் பிரியத்தை, அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரிந்தாலும் பிரியம் குறையாது என்பது கவிஞரின் நம்பிக்கை.
‘அடையாளம் ‘ கவிதை ஒரு தனித்த அடையாளத்துடன் உள்ளது.
சிதிலமான கோட்டையின்
இரத்தச் சிவுப்புச் சுவர்களில்
அடிமையின் நிழல்
அதிகாரத்தில் நிழல்
பரவிக் கிடக்கிறது காலம் காலமாக இவ்வாறான ‘அடையாளாங்கள்’ ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஆண்டான்டு காலமாய் அதிகார வர்க்கம் மக்களை அடிமைப்படுத்தியே வந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அடையாளம் ஏற்படுவதையும் சாpத்தரம் தொடர்வதையும் தடுக்க முடியாது என்கிறார்.
பிடித்ததும் பிடிக்காததும்’ பொதுவானது. அனைவரிடமும் இருக்கும். ‘பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்’ வாழ்ந்தாக வேண்டும்.
எனக்குப் பிடித்தது அவனுக்குப் பிடிக்காது
அவனுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது
நாங்கள்
பதினாறு மக்களைப் பெற்றிருக்கின்றோம் பிடித்தாலும் பிடித்தாலும் வாழ்க்கைத் தொடர்கிறது என்கிறார். மனித வாழ்ககை முரண்பாடுகளால் ஆனது என்பதை ஒவ்வொருவர் வாழ்விலும் அறிந்ததே என்பதை மறுக்க முடியாது.
கவிஞர் சக்தி ஜோதியின் கவிதை உலகம் அலாதியானது. அவருக்குள் ஓர் உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த உலகத்துக்குள்ளேயே வாழ்கிறார். அந்த உலகத்தில் இருந்து கொண்டே அகச்சூழலின் வழியாக புறச்சூழலைப் பேசியுள்ளார் .காதல் சமூகம் சார்ந்தததே என்கிறார். அதற்கேற்பவே காதல் மூலம் சமூகத்தைக் காட்டுகிறார். இனிமையான மொழியைக் கொண்டு கவிதைகளை எழுதி வாசக இதயத்தை வருடச் செய்துள்ளார். முதல் தொகுப்பைப் போலவேஇரண்டாம் தொகுப்பிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். கவிஞர் கடலோடு இசைத்தது மனத்தோடும் இசைக்கிறது. மெல்ல அசைக்கவும் செய்ய முயல வேண்டும். ‘புறக்காரணிகள் என்னை அச்சுறுத்தும் போது துன்பமடைவதை விட கவிதை எழுதுதல் சிறந்த ஆயுதம் எனவே நம்பத் தோன்றுகிறது் என்கிறார். .அவ்வாறு எழுதப்பட்டதாகவே உள்ளது ‘கடலோடு இசைத்தல்’……………………..
………………பொன்.குமார்
 வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், கருமண்டபம் திருச்சி – 1
 விலை ரூ.50
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கட்டுரை, மதிப்புரை and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s