கடலோடு இசைத்தல்

கடலோடு  இசைத்தல் 
                                                                      Theory of Relativity
                                                                      Theory of Evolution
                                                                      Metaphysics
                                                                      Art of Reading
                                                
சக்திஜோதி
“நான் அழகிற்காக இருந்தேன்
கல்லறையில் வைக்கப்பட்டேன்
உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர்
என்னருகே படுக்க வைக்கப்பட்டபோது
அஞ்சினேன்.
நான் ஏன் இறந்தேன் என்று
அவர் கேட்டார்
‘அழகிற்காக’ என்றேன் .
‘நான் உண்மைக்காக’,நாமிருவரும்
சகோதரர்கள் என்றார் அவர்
அவ்வாறாக உறவினர்களைப் போல
இரவு முழுக்க உரையாடினோம் .
புல்வளர்ந்து  பரவி
எங்கள் உதடுகளை மூடி
எங்கள் பெயர்களை மறைக்கும்வரை” .
                                                          – எமிலி   டிக்கன்சன்.
 
“Cause and Effect are Interchangeable;the same things can be both cause and effect in the medium of space and time”
                                                                                                                       -Swami Chinmayanantha.
 
“நாம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல,பிரபஞ்சத்தின் ஒரு பெரிய உண்மையின் ,நாம் உணரும் ,காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு பெரிய உண்மையின் ஒரு சிறிய வெளிப்பாடு”.
                                                                                                                         -அரவிந்தர்
 
 
           இயற்பியலை ,மின்னணுவியலை,வானவியலை,ஆன்மீகத்தை  ஒட்டுமொத்தமாக பாதித்த,அதிர வைத்த சிந்தனைகளில் மிக முக்கியமானது Theory of Relativity என்பதை நாம் அறிவோம் .”காலம் என்று தனிப்பட்ட ஒன்றும் கிடையாது.இரண்டு சம்பவங்கள் அல்லது இரண்டு பொருட்கள் இல்லையேல்   தூரமும்    இல்லை .காலமும் இல்லை”.என்பதுதான் சார்பியல்  தத்துவத்தின்சாரம் .சைக்கிள் ,கார்,விமானம் ,ராக்கெட், செயற்கைக்கோள், ஒலி  , ஒளி என ஒவ்வொன்றும்   ஒரு குறிப்பிட்ட இலக்கை இடைய வெவ்வேறு கால இடைவெளியை எடுத்துக் கொள்கின்றன. கொடுவிலார்பட்டியில் இருந்து அய்யம்பாளையத்தை கடக்க ஒரு செயற்கைக்கோள்   எடுத்துக் கொள்ளும்  நேரத்தை வைத்து நாம் தூரத்தை அளவிட முடியாது . ஆக தூரம் என்பது என்ன ? காலம் என்பது என்ன ? பல்லாயிரம்வருடங்களும் ,இலட்சக்கணக்கான மைல்களும் ஒன்றையொன்று  சார்ந்தவை என்று புரிகிறது .
 
    “என்னைப்  பார்க்க வருவதாக
சொன்ன வார்த்தைகள்
இந்த  காற்றில் கரைந்து
வெளியெங்கும் பரவியிருக்கிறது
 யுகங்கள்  கடந்து.”
 
 ” நூலகத்தில்  அமைதியென
மௌனம்  இடைவெளிகளில்
நிரம்பி வழிகிறது
எல்லாவற்றையும் அகற்றியபடி.”
                            
”   அது என்னுள்
உயிர்த்த போதே
உன்னை வந்தடையும்  கணத்தினை
நான் உணர்ந்தேயிருக்கிறேன்.”
                              
“புறாக்கள் காண்போரின் முகங்களில்
அன்பையும் சமாதானத்தையும்
தேடிக் கொண்டேயிருந்தன
ஆயிரமாயிரமாண்டுகளாய்
காற்றில் கரைந்திருந்த குருதியின்
வாசனையை சுவாசித்தபடி”.
 
     யுகங்களையும்,ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் மௌனத்தில்  கரைத்து விடத்துடிக்கும்  உங்கள் கவிதை உலகம் ஐன்ஸ்டினின்  கருத்து வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன.புரிந்து கொள்பவனுக்கு வாசிப்பு அனுபவத்தையும்,வாசிப்பவனுக்கு  புரிதலின் அடர்த்தியையும் ஒரு சேர வழங்கும் கவிதைகள்  இனிமை.
           மனித குலம் சிந்திக்க ஆரம்பித்த நொடியில் இருந்து திட்டவட்டமான  முடிவுக்கு  வரமுடியாத   கேள்விகளில்  ஒன்று உயிரின் தோற்றம்.உருவாக்கப்பட்டதா?உருவானதா ?  என்பதுதான் .கிருத்துவர்களும்,கடித்துக் கொண்டிருக்கையில் அறிவியலை நம்புபவர்களுக்கு  டார்வினின்  பரிணாமக் கொள்கை  உயிரியலையும் பல கோடி ஆண்டுகள்   நிரம்பிய  கால வெள்ளத்தையும் இரண்டு கைகளில் ஏந்தி ஆய்வின் குரலின் நம் மூளையின்
அறைகளுக்குள் உரைத்து ஒலிக்கின்றது.முதல் உயிரினம் கடலில் ஆரம்பிக்கின்றது  என்றார் டார்வின்.கடல் முழுக்க நீரும் உப்பும். நீரில் ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன்,கடலின் மேற்பரப்பை தொட்டுச் செல்லும் காற்றில் நைட்ரஜன்,மற்றும் கார்பன் .முதல் செல் உயிரினம் மேற்கண்ட வளிமங்களில் ஆரம்பித்து சூரியனின்  ஒளிக்கதிர்கள் மூலம் இரு செல்லாகி ,பாக்டீரியாவாகி, புழுவாகி ,பூச்சியாகி,பயிராகி,மீனாகி,விலங்காகி,குரங்காகி,மனிதனாகி என்று நீளும் பரிணாமக் கொள்கை மதவாதிகளை பயமுறுத்திக் கொண்டேயிருக்கின்றது.சமீபத்தில் அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் பாடத்திட்டத்தில்  இருந்து பரிணாமக் கொள்கையை  நீக்கியிருக்கின்றார்கள்.
                             
                கடல் புராதானமானது  என்றும் கவி வாக்கியத்தை யார் ஒருவரும்    புறந்தள்ளமாட்டார் என்று நம்புகின்றேன்.
     
“கடலின் பழமைக்கு
கடலே சாட்சி
வெளி நனைந்து சிலிர்க்கையில்
வெளிப்படுவது
பிரபஞ்ச சுவையும்
 பழமையின்  வாசனையுமே.”
 ” நிலத்தின் வாசல்
திறக்கின்றது
கடல் புகுகின்றது.
கடல் மேல்
படர்ந்து கொண்டிருந்த வேளை
சூரியன் அவன் கண்களை  நினைவுபடுத்தியது.”
 
“கடல்,கரை,மணல்,காலத்தடங்கள்
கூடவே  உடைந்த சிப்பி
எந்த அர்த்தங்களுமற்று
தம் இருப்பிடங்கலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கின்றன”.  
 
பிரபஞ்சக் கொள்கையை நான் புரிந்து வைத்திருக்கும் கோணங்களில் சக்தி ஜோதியின் கவிதைகள் முழு அர்த்த வீச்சுடன் தடம் பதிக்கின்றன.எந்தவொரு கலையின் தோற்றமும் அறிதலில் தொடங்கி, முரண்பட்டு, இயைந்து, கரைந்து, வியந்து ,  ஏங்கி  சொற்களின்  தஞ்சம்மடைகின்றது.சக்திஜோதியின் கவிதைகளின் சொற்களின் பயணப்பட்டு  அறிவியலில்   சரணடைவது  ஆச்சர்யமே .
              பெரும்பாலும் அகவெளிகளில் பயணம் செய்பவர்கள் இருத்தலியலைப் பற்றி விவாதித்துக் கொண்டேயிருக்கின்றார்கள் . Theory of Existence நவீன ஓவியர்களையும் , சிற்பிகளையும், கவிஞர்களையும்  உருவாக்கிய வண்ணம்  உள்ளது தங்களின்  எண்ண அடுக்குகளை  அப்படியே வார்த்தைகளாக  Translate செய்யும் நவீன கவிதைகளைப் புரிய ஆரம்பித்து பெரும்பாலும் தோற்றுப்போய் விடுகின்றேன். ஆனால் Existence  குறித்த கருத்துகள் நமது இந்திய வேத சிந்தனை  மரபில் ஐயாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே உபநிடத செய்யுள்களின்  மூலம் காணக் கிடைக்கின்றன.
                 நான் சிந்திக்கின்றேன் , அதனால்  இருக்கின்றேன்  என்றார்  ஒரு தத்துவஞானி. ஸ்தூலநிலை,சூட்சுமநிலை  என்று  இரு பிரிவாக்கி உடலை பார்க்கும் துவைதம் ,இரண்டற்றது  உடல் என்று ஓங்கி உரைக்கும் அத்வைதம்  என நீளும் நம்  வேத வியாசங்கள் இஸங்களுக்கு  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
 
 
   ” எழும்பும்  சதையுமாய் ,பல பிறவியாய்
 மாறிக் கொண்டேயிருக்கும் உன்னை
நிழல்களில் கரைந்திருக்கின்றாயா  என
தேடிக் கொண்டிருக்கின்றேன்” .
“வார்த்தைகளில் நம்பிக்கையற்றுக்
கண்களில் சரணடைகின்றேன்
ஒரு துளி கண்ணீர்  வழியாக
கடந்து செல்கிறது அன்பு. “
“என் கண்களில் ஒளிரும் சிறு ஒளி
என்னை விழுங்கி
உன்னையும் விழுங்கி
வெளியில்  கரைகிறது நிலவு மறைந்து
ஓர் அக்கினிப்பந்து எழும்புகிறது
கிழக்கில்”.
 
             உடம்பையும்  மனதையும் ஒத்திசைய  வைத்துக்கொண்டு  ஆசைகளையும் ,நிராசைகளையும்  வார்த்தைகளில் கரைத்து, வார்த்தைகளில் போராடி,வார்த்தைகளில் வெளிப்பட்டு,வெற்றியடைந்து கொண்டிருக்கும்  சக்திஜோதிக்கு  வாழ்த்துக்கள்.
             உன்னத இலக்கியம் மட்டுமே பதிப்பிக்கப்படுவதாக  ஆச்சரியமாக  நம்பிக் கொண்டிருக்கும் அனைத்து இலக்கிய இதழ்களிலும் மென்மையாக, மெதுவாக, கம்பீரமாக  வலம் வரும் சக்திஜோதியின்  இரண்டாவது  தொகுப்பில்  வாசிப்பவனுக்கு  கிடைக்கும்  அனுபவங்கள் யாவை? என்று விவாதிப்பது  அவசியமாகின்றது. அதற்கு  முன்னால் கவிதைகளின்  Basement  யை  ஆய்வது   முக்கியமாகப்படுகிறது.சரித்திரத்தின் வயதை தன் மேல் போர்த்திக்கொண்ட பார்வையாளர்களில் ஒரு பெண் பேசுவதாக  ஒரு கவிதை அமைந்துள்ளது. பார்வையிட வந்த பார்வையாளர்களில் ஒருத்தி தன் அடையாளங்களை  யாவர்க்கும் அறியும்படி திறந்து காண்பிக்கின்றாள்.
                        பேச ஆரம்பித்தப்பின் அப்பெண் ஒதுங்கிக்  கொள்கின்றாள் . அடுத்தபடியாக  அக்கவிதை  பேச ஆரம்பிக்கின்றது. படைப்பு தன்னைத் தானே  எழுதிக் கொள்வதாக  ஆரம்பிக்கப்பட்ட  இயக்கத்தின் பெயர்  Romanticism . கற்பனை மயக்கத்தில் உணர்ச்சிகளின் வேகம் நிகழும்பொழுது  மொழிகளை  துணைக்கு அழைத்துக் கொள்ளும் இவ்வகை முயற்சி முற்றிலும் அழகியலோடு  மட்டுமே சமபந்தப்பட்டிருந்த கவிதை பாரம்பரியத்தை உடைத்து எறிந்தது .ஆனால் ஒரு கட்டத்தில் அர்த்தம் இழந்து குழப்பம் மிகுந்து வார்த்தைக் குவியல்களாக  உள்ள கவிதைகள் வர ஆரம்பித்தன.அதற்குப்பின்  Surrealism வந்தது . இதில்  வார்த்தைகள்  ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும் Logic இன்றி  சமன்பாடு இன்றி கவிதைகள் வர ஆரம்பித்தன.ஆழ்மனம் மட்டுமே படைப்பு மனம்.இதில் மொழிக்கு  இடமில்லை  என்று ஒரு கூட்டம் கிளம்பியது . இவ்வகையில்  ஓவியங்கள் புகழ்பெற ஆரம்பித்தாலும் கவிதைகள் காலவெள்ளத்தில் நிற்க முடியவில்லை.
     இச்சூழலில்  1880 -களில் தோன்றிய Modernism இன்றுவரை  நங்கூரம்  பாய்ச்சி நிற்கின்றது. காப்கா,ரோலண்ட் பாத்,எஸ்ரா பவுண்ட்  ஆகியவர்கள் இவ்வகை எழுத்தில் முன்னோடிகளாக திகழ்கின்றனர்.அடிப்படையாக அழகியல் அனுபவங்களில் மூழ்கி படைப்பு மனதில் திளைத்து கவனத்துடன் மொழிகளாக்கி,அம்மொழியை செதுக்கி பிரதிகளாக்குவது நவீனத்துவம் என அழைக்கப்படுகின்றது
 
“என்னைப் பார்க்க வருவதாக
சொன்ன வார்த்தைகள்
இந்த காற்றில் கரைந்து
வெளியெங்கும் பரவியிருக்கின்றது
யுகங்கள் கடந்து”
“காற்றில்
அவள் அசைய
அவன் வெளியெங்கும் பரவி
மறைகிறான்”
“என்னைக் கடக்கும்
வெயில் நிழலும்
சிதறிய நீரில்  கலைந்த ஓவியமும்
சிதைந்த சுவரின் மாய உருவங்களும்
உன்னை உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன”.
 
       மேற்கண்ட கவிதைகளில் காணக்கிடைக்கும் கச்சிதமும்,வெடித்து சிதறும்  எண்ண அலைகளும்,தொடர்ச்சியும்,உற்றுநோக்கத் தகுந்தவை.நவீனத்துவத்தை  விளக்க  முற்படும் ஒரு மேலைநாட்டு அறிஞர் இவ்வாறு கூறுகின்றார். “ஒரு மனநிலையை ,பெருமூச்சை,மனசாட்சியின் குத்தலை  பகுத்துப்  பார்த்தல்,வண்ணங்கள் பளிச்சிடும் உண்மை ,அற்புதமான  தொடர் உருவகங்கள்  ஆகியவற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தல் . “சக்திஜோதியின்  இத்தொகுப்பு  இந்த Definition -ம் சட்டென்று  ஒரு Geometrical  Equation  போல  ஒத்துப்போவது நடிகை தமன்னாவுடன் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிடுவதை  விட ஆச்சர்யமானதாகும்.
 
   வாசிப்பு உலகில் இக்கவிதை தொகுப்பு எவ்வகை தாக்கங்களை உருவாக்கும் என்று பார்த்தால் வருடும் வார்த்தைகள் ,தொடர்ந்து  வரும் அழகியல் , படித்து மூடி  வைத்த பின்பும் துரத்தில் சிநேகம்  என அனைத்தும் கவிதைகளும் தமிழ்நாட்டு பெண்மை. முந்தாநாள் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தவன் கூட கவிதைகளின் கட்டமைப்பில் மயங்கி சரிவான்.
                 “Poetry  is  an  instrument of the  change  of the  attitude  of the mind  and  Reality ”
இது கவிதை குறித்து மார்க்ஸ் சொன்னது .எல்லாவற்றையும்  போல கவிதையும்  மார்க்ஸ்  மூன்று கூறுகளாக காண்கிறார் .
Productive force
social  Relations
Self consciousness
இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.ஏனெனில் முதல் கூறு தொழிற்சாலைகளில் பணியாற்றும்  பொறியாளர்களுக்கானது .கவிதைகளின் நேரடி applicability  இருக்கக்கூடாது என நினைக்கின்றேன் . ஆனால் சமூக உறவு  பேணுதலும்  சுய எழுச்சியும் முக்கியமானது.
 
“ஒருவரும்
புரியா உலகத்தில்
புரிந்து கொண்டபடி
நடனமாடுகின்ற
அனைத்து கால்களிலும்
பூட்டப்பட்டிருக்கின்றது
ஒரு பூட்டு”
 
என்று மார்க்ஸிய அழகுடனும்  எழுதத் தெரிந்த ,தெளிந்த சக்திஜோதி கவிதை எழுதுவதை கைவிட்டாலும் கவிதை உலகம்  உங்களை  கை பிடித்து  இழுத்து அரவணைத்துக் கொள்ளும்.
    ஒரு பூவை நிலவோடும்  தென்றலோடும் அன்போடும்  சூடி செல்ல இயலாத சக்திஜோதிக்கு ஆதி அந்த அர்த்தத்தோடும் , அடி  ஆழ வெளியோடும் சொற்கள் பிறக்கும் கணங்களின் துல்லியத்தோடும் எழுத தெரியாத என்னிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள்  உங்கள் வீட்டு  தோட்டத்தின் பூக்களில் ஒன்றாக இருந்து  மணம்வீசும் என்று நம்புகிறேன்.
அன்புடன்…..
பொன்முடி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கட்டுரை, மதிப்புரை and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s