சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’ – கவிதைத் தொகுப்பு

 

மதுமிதா 
காதல் பிரபஞ்ச உயிர்ப்பின் ரகசியம். எவரும் கற்றுக் கொடுப்பதால், கற்றுக் கொண்டு வருவதல்ல அது. தானே அறிய இயலாமல், எக்கணம் இது தனக்குள் நிகழ்கிறது எனத் தெரியாமல், சட்டென தலை நீட்டி அக்கணம் பூத்த பூவாய் அது மலர்ந்து மகிழ்விக்கும். சக்தி ஜோதியின் அந்த அக மகிழ்வை, அந்த மனதின் உணர்வுகளை இந்தத் தொகுப்பு சுட்டிக் காட்டுகிறது.
மொட்டு பூவாய் மலர்கிறது, காய்கிறது, கனிகிறது. இந்த நிகழ்வு எதையும் நம் கண்ணால் காண இயலாது. அதைப் போன்றதுதான் காதல் மலரும் தருணமும். அந்த மென்மையான தருணத்தை தான் நான் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் சக்திஜோதி. இந்த ‘நிலம் புகும் சொற்கள்’ கவிதைத் தொகுப்பில் அவரே அளித்த முன்னுரை இது.
நூல் முழுக்க காதலையும், காதல் சார்ந்த நினைவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இதில் முக்கியமான ஒன்றாக நூல் முழுக்க முழுக்க இரு டஜன்களுக்கு இரண்டே எண்ணிக்கை மட்டுமே குறைவாக முத்தங்களை அள்ளி நிரவி அளித்திருக்கிறார். ஆகவே நூலின் தலைப்பினை ‘உடல் அதிர முத்தங்கள்’  என வைத்திருக்கலாமே எனத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் மீதான ஈர்ப்பு தன்னை எழுத வைத்ததாகவும், “வெள்ளி வீதியாரின் மகள் நான்” என்றும் இக்கவிதைத் தொகுப்பில் பதிய பிரியப்பட்டு படைத்திருக்கிறார்.
‘நான் யார்?’ என்ற கேள்வியை முன்வைத்தவர் ரமணர். ஆன்மிகவாதிகளாக இருக்கட்டும், நாத்திகவாதிகளாக இருக்கட்டும், அனைவருக்கும் ‘நான் யார்’ என்ற கேள்வி உள்ளார்ந்த ஒரு பதிலை உருவாக்கித் தரும், வெளிப்படுத்தும் தூண்டுதலையும் தரும். தன்னை உணரச் செய்யும் கேள்வியாகவே அந்த ‘நான் யார்’ அமைகிறது.
இதே கேள்வியை ஒரு மணமான பெண்ணின் முன் வைத்து பதிலைப் பெற நினைத்தால், அப்பெண் அவளுடைய தந்தைக்கு மகளாக இருக்கிறாள். கணவனுக்கு மனைவியாக இருக்கிறாள். குழந்தைக்குத் தாயாக இருக்கிறாள். உடன்பிறந்தவருக்கு சகோதரியாக இருக்கிறாள். சமூகத்தின் நல்ல நட்புகளுக்குள் நல்ல சிநேகிதியாக அறியப்படுகிறாள். இது போல் ஒரு பெண் தன்னுடைய உறவுமுறை சார்ந்து பல உருவங்களில் அறியப்படுகிறாள். இச்சூழலில் அவள் பணிபுரியும் பெண்ணாக இருந்தால் அதற்குண்டான மேலும் பல பொறுப்புகளைச் சுமந்து கொண்டு அப்பெண் பலருடைய பார்வையில் பல கோணங்களில் பார்க்கப்படுகிறாள். அவர்களுடைய பார்வைக்கேற்றார் போன்றே அவள் ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொரு வேடமேற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறாள். அதே சமயம், தான் அந்தரங்கமாகக் கருதும் ஒருவர்  முன் மட்டுமே அப்பெண்ணுக்குத் தன்னை, தன்னுடைய இருப்பை இயல்பாக உண்மையாக முன்வைக்க முடிகிறது. பிறருடைய பார்வையில் அவள் வேறு எப்படி தோன்றினாலும், அவளுக்கு தான் தானாக இருப்பதை உணரவைக்க அந்தரங்கமான ஒரு தோழியோ, தோழனோ, எதிரே பிரத்யட்சமாக தோன்றும் போதுதான், தான் தானாகவே இருப்பதை அவள் உணருகிறாள். பிறருக்கு எப்படி அவள் தோன்றினாலும், அந்தரங்கமானவர் முன்னிலையில் தான் தானாகவே இருப்பதை தான் உணர்ந்தது போல், அவரும் உணரவேண்டும் எனும் ஆவல் ஏற்படுகிறது. அதையே சக்திஜோதி ‘ஓவியம்’ எனும் தன்னுடைய கவிதையில் வரைந்திருக்கிறார்.
 
என்னை சித்திரமாக
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
நான்
எத்தனை முறை
வரையப்பட்டுள்ளேன் என்பதும்
ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப்போனது என்பதும்
நான்
யார் யாருக்கோ
அடையாளமாக இருக்கையில்
உன் நினைவில்
என் இருப்பை உணர்கின்றேன்
இதில் மேலும் கடைசியாய் வரும் இரு வரிகள் கவித்துவத்தை முன் நிறுத்த வருகின்றன.
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே 
    (ஓவியம்)
இங்கே வெளிப்படுவது இயல்பான அந்தரங்கம். பிறர் பார்வையில் ‘நான் யார் யாருக்கோ ஏதோ ஒரு அடையாளமாக இருக்கலாம். ஆனால், நீயும் கூட அவர்களைப் போல ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே. நான் நானாக இருப்பதை அப்படியே நீ எடுத்துக் கொள்’  என வெளிப்படுத்தும்  உணர்வு, மேலான நெருக்க உணர்வை பகிரங்கமாய் அறிவிக்கிறது.
ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது, அல்லது அவள் சிறுமியாக இருந்தால், சிறு வயதில் தனிமையில் மிரள்வது இயல்பான விஷயம். இருளிலோ, தனிமையிலோ அச்சிறுமியின் தாய் அவளிடம்  தான் அவளுக்காக அவள் அருகில் பாதுகாப்பாய் இருப்பதை உணர்த்தி, சிறுமியை பாதுகாப்புடன் விரல் பற்றி நடத்திச் சென்று இவ்வுலகை அவளுக்கு காட்டுகிறாள். சொந்தக் காலில் நின்று அவள் வளர வளர, சிறுமி என்பது மாறி இளமைப் பருவமாகி, தன்னுடைய பார்வையில் அவள் உலகைப் பார்க்கத் தொடங்குகிறாள். அப்போது அவளிடத்தில்; அவளுடைய மன உணர்வுகளில் ஏற்படும் மாற்றமும், அதிலும் அவள் காதல் வசப்பட்டால் மனநிலையில் ஏற்படும் மாற்றம் என்னவாக இருக்கும், அதையும் இங்கே தனது ‘அறியாமை’ கவிதையில் தருகிறார்.
பாலியத்தில்
தாயின் விரல்கள் பற்றி
நடை பழகுகையில்

தனிமை அச்சமூட்டியது
என்னை
இப்பொழுது
தாய் அறிந்த எனதுடலை
அவளிடமிருந்தே மறைக்கும் காலம்    (அறியாமை)
தான் பெற்று வளர்த்த சிறுமியின் உடலை தாய் அறிந்த காலம் மாறி, இன்று உடலை அவளிடமே மறைக்கும் இளமைக்காலம் தொட்டாகிவிட்டது. அவளுடைய உடலில் இப்போது காதல் ரகசியமாய் மணந்து கிடக்கிறது. உடல் முழுக்க காதலின் மணம் விரவிக் கிடக்கிறது.
உன் மீது
ரகசியமாய் மலர்ந்த காதல்
எனக்குள் மணந்து கிடக்கிறது
     (அறியாமை)
ஒரு மலர்
மணம் வீசி விகசிப்பது போல

இதனால் இப்போது தனிமைக்காக ஏங்குகிறாள். இதை அறியாத தாய், அவளை சிறுவயதில் தனிமையிலிருந்து எப்படி பாதுகாத்தாளோ அதுபோல பாதுகாக்க வருகிறாள். பாவம் தாயிடம் எப்படிச் சொல்வாள் அவனைக் காண தனிமை வேண்டும் என்பதை.
தனிமைக்காக
ஏங்கித் தவிக்கும்
என் நிலையறியாது
அன்பைப் பொழியும் தாயிடம்
எப்படிச் சொல்வேன்
உன்மேல் கொண்ட
காதலையும்
என் பருவம்
உன்னை நாடுவதையும்   (அறியாமை)
என் பருவம் உன்னை நாடுவதையும்’ எனும் வரிகள் இல்லாமலேயே இக்கவிதை முழுமையானதாகத்தான் தெரிகிறது….. ‘ அன்பைப் பொழியும் தாயிடம் எப்படிச் சொல்வேன் உன் மேல் கொண்ட காதலை’ எனும் போது அதன் சிறப்பு அதிலேயே வந்துவிடுகிறது. மேற்கொண்டு பருவம், நாட்டம் குறித்து சொல்லாவிட்டாலும், புரியும் தன்மை அதில் உள்ளடங்கியே உள்ளது. எனினும் தனது பருவத்தின் நாட்டத்தையும் பகிரங்கமாய் பதிவு செய்கிறார்.
நாணம் குறித்து ஒரு கவிதை. முத்தம் எனும் வார்த்தை இல்லாத கவிதையை மட்டுமே இதில் குறிப்பிட விளைந்தேன். ஆனால், இந்த நாணத்திலும் முத்தம் இருந்து கொண்டிருக்கிறது. ஒருவன் மீது உண்டான, உள்ளத்தினின்றும் ஊற்றெடுத்துப் பெருகி வரும் காதல், அவனுக்குத் தன்னைக் கொடுப்பதற்கான நாளை நோக்கி பயணிக்கிறதாம். அப்போது அவனுக்கு அப்பெண் தர வேண்டிய முத்தங்களின் சேகரிப்பும், நாணத்தின் அச்சமும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்திக் கருக்கலில்
சுனை நீரென
ஊற்றெடுக்கின்றது
உன் மீதான காதல்
என்னை
உனக்களிக்கும்
நாளை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
நம்
மனங்கள்
ஒன்றெனக் கலந்த நாளிலிருந்து
சேகரமாகிக் கொண்டிருக்கும்
முத்தங்களை எண்ணிக் கொண்டிருக்கிறது
என்னுடன்
தனித்திருக்கும் நாணம் அச்சத்தோடு   (நாணம்)
அருமையான பதிவு. சிறப்பாக வந்திருக்கிறது. மேலும் இத்தொகுப்பில் 22 முத்தங்கள் கடந்து பல இடங்களில் வரும் வார்த்தைகள் நினைவு, சுடர், பருவம்.
‘நினைவு’ என்னும் கவிதையை சொல்லியாக வேண்டும்.
ஆழ்ந்த உறக்கம். உறக்கத்தில் மனம் ஆழ்ந்து விடுகிறது. அது கனவுகளற்ற நிலையா? தியானமற்ற ஆழ் உறக்கமா? பல நிலைகள் சக்திஜோதி சொல்கிறார்: மனதைக் கலைக்கிறாய். நினைவு வதைக்கையில் களைத்துத் தூங்கும் போது கனவைத் தூண்டி எழுப்புகிறது. கனவிலும் நீயே வந்து சேர்கிறாய். உன்னிடம் உணர்ந்ததை யாரும் அறியாமல் ரகசியமாய் உன்னிடமே சொல்கையில் பறவைகள் பாடலிசைக்க பொழுது புலர்கையில் துயில் கலைகிறது. எப்படி? இருப்பை விழுங்கியபடி நினைவை போர்த்தியபடி இன்னும் உள்ளூறும் பொருள் விளங்க இதோ ‘நினைவு’ கவிதை முழுவதுமாய் :
ஓப்பனைகளேதுமின்றி
உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கிற மனதில்
நீ
ஒரு மீனென நீந்தி
என்னைக் கலைக்கிறாய்
உன் நினைவு வாதையாக மாறி
நிரம்புகையில்
களைத்த எனதுடல்
நித்திரையில் மூழ்கி
கனவுகளைத் தூண்டுகிறது
கனவில்
வடிவங்களற்று
என் மீது படர்கிறாய்
உன்னை
உணர்ந்தபடி
ஏதேதோ சொல்கிறேன்
ரகசியமாய் எவரும் அறியாவண்ணம்
பறவைகள்
நமக்கான பாடலை
இசைக்கத் தொடங்குகின்றன
உனதுடனான
எனது இருப்பை விழுங்கியபடி
மெல்லத் துயில் கலைகிறது
உன்
நினைவை
என்மீது போர்த்தியபடி..           (நினைவு)
நல்லதொரு பதிவு. இந்நூல் வரும் போது விளையாட்டாய் பதிந்து விட்டேன் என்றார் சக்திஜோதி. சரியானதோர் தருணத்தில் கவிதையுலகுக்கு வந்திருக்கிறார். விளையாட்டுப் பதிவே சிறப்பாக வந்ததென்றால், இனி அடுத்து வரும் பதிவுகளில் விளையாட்டாக மட்டுமில்லாமல், ஆழ்ந்த கவனிப்போடும், கவனம்படும் வகையிலும் தீர்க்கமான சிந்தனையுடன் இயல்பாக வெளிப்படும் கவிதைகள் படைத்து மேலும் பல தொகுப்புகள் வெளிவரட்டும்.
வாழ்த்துகள் ஜோதி!
மதுமிதா

sisulthan

படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கட்டுரை, கவிதை, நிலம் புகும் சொற்கள், மதிப்புரை and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s